8 மாத குழந்தையுடன் ரயிலில் இருந்து விழுந்த தாய்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பாதுகாப்புப்படை ஆய்வாளர்
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த குழந்தையையும், தாயையும் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய செயல் அனைவரின் பாராட்டுதல்களை பெற்று வருகிறது.
![8 மாத குழந்தையுடன் ரயிலில் இருந்து விழுந்த தாய்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பாதுகாப்புப்படை ஆய்வாளர் Railway Security Force inspector Sudhirkumar rescues mother and daughter trapped in train Mayiladuthurai 8 மாத குழந்தையுடன் ரயிலில் இருந்து விழுந்த தாய்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பாதுகாப்புப்படை ஆய்வாளர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/02b64424a6822f6776e1ec234d31cb4c_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை ரயில்வே நிலைய ஜங்சன் சுற்று வட்டார மாவட்டங்களில் மிக முக்கிய ரயில் நிலையமாக இருந்தது வருகிறது. பழம்பெருமை வாய்ந்த இந்த ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான ரயில்களும், ஆயிரக்கணக்கான இரயில் பயணிகளும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பயணிகளில் சிலர், அவ்வப்போது ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய முயற்சிப்பதும் அது போன்று ஓடும் ரயிலில் ஏற முயற்சிப்பதும் இதன் விளைவாக சில சமயங்களில் பலர் தவறி விழுந்து பெரும் விபத்துக்களும் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான மங்களம். இவர் இன்று மதியம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்புவதற்காக அவரது மகள்களான 32 வயதான தையல்நாயகி மற்றும் 30 வயதான கவிதா ஆகிய இருவரும் உடன் வந்துள்ளனர்.
அப்போது மங்களத்தை ரயிலில் ஏற்றி இருக்கையில் அமர வைத்துவிட்டு இரயிலின் உள்ளே நின்று மூவரும் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ரயில் புறப்பட்டதைக் கண்டு சகோதரிகள் இருவரும் அவசர அவசரமாக ரயிலை விட்டு கீழே இறங்கியுள்ளனர். அப்போது இரயில் புறப்பட்ட பதற்றத்தில் தனது குழந்தையுடன் இறங்கிய கவிதா, நிலை தடுமாறி தனது 8 மாத குழந்தையுடன் கீழே விழுந்துள்ளார்.
அப்போது அங்கு உள்ளவர்கள் பதறிப்போக, இரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்துக்கொண்டு, ஓடிச்சென்று நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்த கவிதாவையும், அவரது 8 மாத குழந்தையையும் தனது கால்களால் தாங்கிப் பிடித்து எந்தவித காயமும் இன்றி காப்பாற்றினார்.
மேலும் படிக்க.. Harish Uthaman Wedding | மீண்டும் திருமணம்.. காதலியை கரம் பிடித்தார் ஹரிஷ் உத்தமன்..
இதில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமாருக்கு, காலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதிர்குமார், உதவி ஆய்வாளர்கள் தனசேகரன், துரைசிங்கம், காவலர் அருள்குமார் உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய சகோதரிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தன் உயிரைப் பணயம் வைத்து தாய், குழந்தையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமாரின் சமயோஜித செயலுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)