Thiruvarur : பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் எதிரொலி..! வாட்டர்கேன்களில் பெட்ரோல், டீசல் விற்கக்கூடாது - காவல்துறை எச்சரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பா.ஜ.க. அலுவலகங்கள் என 67 இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி: திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல் டீசல் வழங்கக் கூடாது என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மற்றும் அரசு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் பொது இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் என பல வன்முறை சம்பவங்கள் மர்ம நபர்களால் நடைபெற்ற வருகின்றன. இதனால் காவல்துறையினர் செய்வதரியாது திகைத்து வருகின்றனர். குறிப்பாக, கோவை, திண்டுக்கல், தாம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களில் பா.ஜ.க. பிரமுகர்கள் இல்லம், அலுவலகம், இந்து முன்னணியினர் அலுவலகங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் அலுவலகங்கள் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று இருப்பது தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதனை அடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக வாகன சோதனை, பா.ஜ.க. பிரமுகர்களின் அலுவலகங்களில் பாதுகாப்பு என பல்வேறு நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் பள்ளிவாசல்கள் பாஜக அலுவலகங்கள் என 67 இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று 29 ரோந்து வாகனங்கள் மூலமாகவும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும், திருவாரூர் மாவட்டம் கோவில்பட்டி கொள்ளுமாங்குடி கானூர் முத்துப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெட்ரோல் பங்குகளில் வாட்டர் பாட்டில்களில் யாரேனும் பெட்ரோல் மற்றும் டீசல் கேட்டால் கொடுக்கக் கூடாது என மாவட்ட காவல் துறையினர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். அதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பொதுமக்களுக்கு வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படமாட்டாது என பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த திருவாரூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் அரசு பேருந்து அதேபோன்று திருவாரூரிலிருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் அரசு பேருந்து உள்ளிட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கண்ணாடிகளை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று அங்கு அரசு பேருந்துகளில் கண்ணாடி உடைப்பு சம்பவம் குறித்து நேரடியாக விசாரணை மேற்கொண்டார். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என தேடி வரும் நிலையில் தற்பொழுது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தமிழக முழுவதும் அதிகளவில் நடைபெற்று வருகின்ற நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.