மனித கழிவுகளை மனிதர்களால் அகற்றும் அவலம்; மீண்டும் மீண்டும் மக்களுக்கு விழிப்புணர்வு
மனிதர்களைக் கொண்டு கைகளால் மனித கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மனிதர்களைக் கொண்டு கைகளால் மனித கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் பேரணியை மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகம் எவ்வளவு வேகமாய் முன்னேறி, விஞ்ஞான வளர்ச்சியை அடைந்தாலும் மனித கழிவுகளை சக மனிதனே அகற்றும் கொடுமை மட்டும் இன்றளவும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இதனால் தூய்மைப் பணியாளர்களுக்கு ஏராளமான நோய்களும், பணியின் போது இறப்புகளும் தொடர்ந்து நடந்தேறிய வண்ணமே உள்ளன.
இதனை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சட்டமும் நடைமுறையில் உள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டத்தின் பிரிவு 9-ன் படி மனிதர்களை கொண்டு கழிவுநீரகற்றினால், முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று 2 வது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இது இரண்டு தண்டனையும் சேர்த்து வழங்கப்படும். தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள், உள்ளிட்ட இடங்களில் உரிய அனுமதி மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவு நீரகற்றும் பணிகளை மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி சார்பாக மனிதர்களை கொண்டு கைகளால் மனிதக் கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறை நகராட்சி சார்பாக நடத்தப்பட்டது. தியாகி நாராயணசாமி நகராட்சி மேல் நிலை பள்ளியில் துவங்கிய பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் மயிலாடுதுறை நகராட்சி நகர் மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் பாலு, நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.
பேரணியில், கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் மூலமாக கழிவுகளை அகற்ற கட்டணமில்லா தொலைபேசி 14420 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தானியங்கி கழிவு நீர் அகற்றும் வாகனத்தை பயன்படுத்த வேண்டும், மனிதர்களைக் கொண்டு மனிதக்கழிவுகள் அகற்றப்பட்டால் ஒராண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த மாணவர்களின் பேரணி பள்ளியில் நிறைவடைந்தது. முன்னதாக ஆட்சியர் உறுதிமொழியை வாசிக்க அதனைத் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
Senthil Balaji: மீண்டும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனையில் இறங்கிய அமலாக்கத்துறையினர்..