Kim Jong Un Train: 4,500 கி.மீ., தூரம்..ஆனாலும், வடகொரிய அதிபர் ரயிலில் பயணிப்பது ஏன்? ராக்கெட் லாஞ்சர் - பார்பிக்யூ வரை..
ரஷ்யாவிற்கு செல்ல வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பயன்படுத்திய ரயிலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் பலரையும் வியப்படைய செய்துள்ளது.
ரஷ்யாவிற்கு செல்ல வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பயன்படுத்திய ரயிலில், ராக்கெட் லாஞ்சர் தொடங்கி பார்பிக்யூ சிக்கன் வரை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யா சென்ற வடகொரிய அதிபர்:
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எச்சரிக்கையயும் மீறி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அதிபர் புதினை சந்தித்து ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு கைமாறாக எரிசக்தி, உணவு தானியம் மற்றும் அதி நவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றை பெற வட கொரிய அதிபர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை தாக்கும் வல்லமை வட கொரியாவிற்கு அதிகரிக்கும் என்று அந்நாடுகள் அஞ்சுகின்றன. இந்நிலையில் தான், ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் உள்ள ரஷ்யாவிற்கு, கிம் ஜாங் உன் 20 மணி நேரம் ரயிலிலேயே பயணித்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ரயில் பயணம் ஏன்?
வடகொரிய ராணுவத்தை அமெரிக்க போன்ற வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் விதமாக வலுப்படுத்தி வருகிறார் கிம் ஜாங் உன். அதில் விமானப்படையும் அடங்கும். இருப்பினும், ஆயிரத்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரஷ்யாவிற்கு, கிம் ஜாங் உன் விமானத்தை பயன்படுத்தாமல் ரயில் மூலமே பயணித்துள்ளார். அந்த பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திலான ரயிலையே தொலைதூர பயணத்திற்கும் அவர் பயன்படுத்த காரணம் அவர்களது முன்னோர்கள் தான். வடகொரியாவை உருவாக்கிய கிம் இல் சுங் மற்றும் அவரது மகனும், கிம் ஜாங் உன்னின் தந்தையான கிம் ஜாங் இல் இருவரும் பறக்க பயந்ததாக கூறப்படுகிறது. சோதனை ஓட்டத்தின் போது தங்களது ஜெட் வெடித்ததைக் கண்டு அவர்கள் விமான பயணத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு அவர்கள் ரயில் பயணத்த தொடங்க அதுவே அவர்களாகது குடும்ப பழக்கமாக மாறியுள்ளது.
நாள் கணக்கில் பயணம்:
கிம் ஜாங் இல் கடந்த 2001ம் ஆண்டு புதினை சந்திப்பதற்காக, ரயிலில் 10 நாட்கள் பயணித்து மாஸ்கோ சென்றார். அந்த குடும்ப பழக்கத்தை தான் தற்போதைய வடகொரிய அதிபரான கிம் ஜான் உன்னும் பின்பற்றி வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க, 4500 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க இரண்டரை நாட்கள் ரயிலில் பயணித்து வியட்நாம் சென்றடைந்தார். இதன் வேகம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம் ஆனால், இதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரயிலின் வடிவமைப்பு & வேகம்:
மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் லண்டனின் அதிவேக ரயில் மற்றும் மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் ஜப்பானின் ஷிங்கன்சென் புல்லட் ரயில்களுடன் ஒப்பிடுகையில், கிம் ஜாங் உன்னின் ரயில் மிகவும் கனமானது. அதிகபட்சமாக மணிக்கு 59 கிமீ வேகத்தில் மட்டுமே இந்த ரயிலை செலுத்த முடியும். காரணம் இதில் இடம்பெற்றுள்ள 20 பெட்டிகளும் குண்டு துளைக்காத கவச பாதுகாப்பு அம்சத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. ராக்கெட் லாஞ்சர் கொண்டு தாக்கினாலும் ரயிலுக்கு எந்த பாதிப்பும் வராது என கூறப்படுகிறது. இதில் மாநாட்டு அறைகள், பார்வையாளர் அறைகள் மற்றும் படுக்கையறைகள் உள்ளன. செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் பிளாட்-ஸ்கிரீன் தொலைக்காட்சிகள், விளக்கப்படங்களும் நிறுவப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள்:
வடகொரிய அதிபரின் இந்த ரயிலுக்கு முன்பாக ஒரு ரயிலும், பின்புறம் ஒரு ரயிலும் பயணிக்கும். அதில், முன்னே செல்லும் ரயில் இருப்பு பாதையின் பாதுகாப்பை உறுதி செய்யும், பின்னே வரும் ரயில் பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்களை கொண்டிருக்கும். வடகொரிய அதிபர் குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு முன்பே அங்கு பாதுகாப்பு படையை சேர்ந்த 100 பேர் சென்று பாதுகாப்பை உறுதி செய்வார்கள். அந்த ரயில் நிலையங்களில் வேறு எந்த ரயிலும் செல்லாதவாறு மின்சாரம் துண்டிக்கப்படும். போதுமான அளவிலான ஆயுதங்களுடன், ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் வசதி கூட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோவியத் தயாரிப்பான Il-76 விமானப்படை விமானம் மற்றும் Mi-17 ஹெலிகாப்டரும் இந்த ரயிலின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன.
உணவு வகைகள்:
பயணத்தின் போது வடகொரிய அதிபருக்கான உணவை தயாரிப்பதற்கான ஒரு பிரத்யேக உணவகமும் ரயிலில் இடம்பெற்றுள்ளது. பன்றி பார்பிக்யூ, இறால் போன்ற உணவு வகைகளுடன், விலையுயர்ந்த பிரெஞ்ச் ஒயின் போன்றவையும் இந்த ரயிலில் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.