மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் - விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி சென்று சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ம
தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெருமளவில் கையூட்டு பெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் அது தொடர்பாக மாநில முழுவதும் பல புகார்கள் எழுவதும், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்ததும் என நடவடிக்கை எடுத்தாலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகள் இன்றளவும் குறைந்தபாடில்லை.
மயிலாடுதுறை மாவட்டம் முத்தூர், அகர ஆதனூரை சேர்ந்தவர் 35 வயதான விவசாயி மதன் மோகன். இவர் தனக்கு சொந்தமான இரண்டு டிராக்டர்களுக்கும் முறைகேடாக வாகன பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி தனது தாய் உமா மகேஸ்வரியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அதனைத் தொடர்ந்தும் அவர் புகார் மனுவின் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான மதன்மோகன் இன்று மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு விஷம் அருந்தி, அலுவலக வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது இந்த முடிவிற்கு மயிலாடுதுறை முன்னாள் வட்டார போக்குவரத்து அலுவலர் சண்முகவேல் மற்றும் தற்போதைய போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் ஆகிய இருவருமே காரணம் என குற்றச்சாட்டி கோஷங்கள் எழுப்பினார்.
தொடர்ந்து அரை மயக்க நிலைக்குச் சென்ற மதன்மோகனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி சென்று சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்ந்த பணிகளுக்கு அங்கு வந்திருந்த பொதுமக்கள் பலர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும், இந்த இரு அலுவலகங்களிலும் லஞ்ச, லாவண்யம் கரைபுரண்டு ஓடுவதாகவும், போக்குவரத்து வாகனம் தொடர்பாக எந்த ஒரு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றாலும் போக்குவரத்து அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ள புரோக்கர்களை நாடவேண்டிய சூழல் நிலவுவதாகவும், நேரடியாக விண்ணப்பம் செய்து இங்கு பணிகளை மேற்கொண்டார் அவற்றை புறக்கணித்து அலைக்கழிப்பு செய்யப்பட்டு பணியினை செய்து தர வட்டார போக்குவரத்து அலுவலர் மறுப்பதாகவும் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றன. இதனை அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050