Mayiladuthurai: மாரத்தான் ஓடிய சிறுவன்... உற்சாக படுத்த பின்னாடியே ஓடிய பெற்றோர் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி சம்பவம்!
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சள் பை யை பயன்படுத்த வலியுறுத்தி 10 கிலோமீட்டர் தூரம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தியும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வலியுறுத்தியும் மயிலாடுதுறை மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனம் தன்னார்வ அமைப்பு சார்பில் 10 கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. செம்பனார்கோவில் கீழ மூக்குட்டு பேருந்து நிறுத்தம் அருகே துவங்கிய மாரத்தான் போட்டியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
போட்டியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி அனைவரும் முன்னதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டியில பிரஜன் என்ற 12 வயது மாணவன் களைப்படைந்த நிலையில் அவரது தந்தை முருகராஜ் மகனுடன் சேர்ந்து ஓடியும், தாயார் இருசக்கர வாகனத்திலும் சென்று மகனுக்கு களைப்பு தெரியாமல் இருக்க உற்சாகப்படுத்தி ஆர்வத்தை தூண்டினர். முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்கு கோப்பைகள் பதக்கங்கள், ரொக்க பணம் வழங்கப்பட்டன.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி மாவட்ட உடற்கல்வி அலுவலர் அப்துல்லா, தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன், செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசுந்தரி, உள்ளிட்ட ஏராளமானோர் துவக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற