Elon Musk Twitter: இனி யூடியூப் வேணாம் போலயே..! டிவிட்டரில் வருகிறது புதிய அப்டேட் - எலான் மஸ்க் அறிவிப்பு
சமூகவலைதள செயலியான டிவிட்டரில் விரைவில் புதிய அப்டேட் ஒன்று வரவுள்ளதாக, அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
சமூகவலைதள செயலியான டிவிட்டரில் விரைவில் புதிய அப்டேட் ஒன்று வரவுள்ளதாக, அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
டிவிட்டர் - எலான் மஸ்க்:
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் அந்நிறுவனத்தில் நாள்தோறும் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. செலவினங்களை குறைக்க ஊழியர்கள் பணிநீக்கம், வருவாயை அதிகரிக்க வெரிஃபைட் கணக்குகளுக்கு சந்தா வசூலிப்பது உள்ளிட்ட பல மாற்றங்களுடன், நீளமான பதிவுகள், வீடியோக்களை வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு அப்டேட்களும் செயலியில் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு, பயனாளர்களின் கோரிக்கையை ஏற்றும் டிவிட்டர் செயலியில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வரிசையில் டிவிட்டரில் புதிய அப்டேட் ஒன்று விரைவில் வர உள்ளதை எலான் மஸ்க் உறுதி செய்துள்ளார்.
டிவிட்டரில் வீடியோ செயலி:
S-M Robinson எனும் பயனாளர் “எங்களுக்கு உண்மையாகவே ஸ்மார்ட் டிவிகளுக்கான டிவிட்டர் வீடியோ செயலி தேவை. டிவிட்டரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலான வீடியோக்களை எங்களால் பார்க்க முடியவில்லை” என கோரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், "அது வந்து கொண்டிருக்கிறது" என குறிப்பிட்டு இருந்தார். ”இதை நான் பாராட்டுகிறேன். யூடியூப் சப்ஸ்கிரிப்ஷனை ரத்து செய்யும் அந்த நாளை நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். இனி நான் அதை திரும்பி கூட பார்க்கமாட்டேன்” என ராபின்சன் குறிப்பிட்டு இருந்தார்.
யூடியூப் செயலிக்கு போட்டி:
யூடியூபில் காண்பதை போலவே பல்வேறு விதமான வீடியோக்களையும், அந்த புதிய டிவிட்டர் வீடியோ செயலி மூலம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் உலகம் முழுவதும் இந்த அப்டேட் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது.
விளம்பரம் மூலம் வருவாய்:
கண்டண்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பரங்கள் மூலமாக வருவய் ஈட்ட வழிவகை செய்யப்படும் என அண்மையில் டிவிட்டர் நிறுவனம் அறிவித்தது. அடுத்த சில வாரங்களில் இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வரும் எனவும், முதற்கட்டமாக இந்த சேவைக்காக 40 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வெரிஃபைட் கணக்குகளை கொண்டுள்ள பயனாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 மணி நேர வீடியோ பதிவேற்றம்:
வெரிஃபைட் கணக்குகளை கொண்ட பயனாளர்கள் 8 ஜிபி வரையிலான 2 மணி நேர நீளத்திற்கான வீடியோக்களை பதிவிடலாம், என்ற அம்சமும் அண்மையில் பயன்பாட்டிற்கு வந்தது. முன்னதாக 60 நிமிட வீடியோக்களை மட்டுமே அதிகபட்சமாக பதிவிட முடிந்தது. அதோடு, முன்னதாக நீளமான வீடியோக்களை வெப்சைட் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடிந்தது. ஆனால் தற்போது ஐஓஎஸ் செயலியில் இருந்தும் நிளமான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடிகிறது. அதேநேரம், பதிவேற்றம் செய்யக்கூடிய வீடியோவின் அதிகபட்ச தரம் என்பது தற்போதும் 1080p ஆகவே உள்ளது.