மயிலாடுதுறை: இரண்டு மாதத்திற்கு பின் இயக்கப்படும் பேருந்துகள்! பொதுமக்கள் மகிழ்ச்சி..!
தமிழகத்தில் இன்றுமுதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 மாத இடைவெளிக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. தினந்தோறும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வந்தது. அது படிப்படியாக குறையத் தொடங்கி தற்போது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 க்கு கீழ் வந்து நேற்று 34 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் இதுவரை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 284 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 19 ஆயிரத்து 761 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று ஒரேநாளில் மட்டும் 34 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 35 பேர் குணமாகி சென்றுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சூழலில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் 10-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதன்காரணமாக பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்படுகிறது. இதை அடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மயிலாடுதுறை கிளை பணிமனையில் இருந்து சரியாக ஆறு மணிக்கு பேருந்து நிலையங்களுக்கு பேருந்துகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு புறப்பட்டன. முன்னதாக ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை கிளைக்கு உட்பட்ட மயிலாடுதுறை பணிமனையில் உள்ள 73 பேருந்துகள், சீர்காழி பணிமனையில் உள்ள 42 பேருந்துகள் மற்றும் பொறையாறு பேருந்து நிலையத்தில் உள்ள 29 பேருந்துகளில் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் செல்லும் பேருந்துகள் தவிர்த்து பிற பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படுகின்றன. இன்று முதல் நாள் என்பதால் பெரும்பாலும் எல்லா பேருந்துகளிலும் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்தனர். முன்னதாக பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்தில் அனுமதித்தனர். மேலும் இரண்டு மாதங்களுக்குப் பின் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.