மீன்பிடி வலைகள் தொடர்பாக ஆய்வு நடத்தினால் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம்- 3 மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கை
மீனவ கிராமங்களில் மீன்வளத்துறை அதிகாரிகளின் ஆய்வு தொடர்ந்தால் மயிலாடுதுறை, காரைக்கால், நாகை மீனவர்கள் சேர்ந்து உண்ணாவிரததில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களைச் சேர்ந்த திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார், சந்திரபாடி மீனவர்கள் சுருக்கு மடி வலைகள் மீதான தடையை நீக்கக்கோரியும் 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரியும் முன்வைத்து கடந்த ஜூலை 16ஆம் தேதி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட சுருக்கு மடி வலை பயன்படுத்தும் மீனவ கிராமங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்த மாவட்ட ஆட்சியர் லலிதா, மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முழுமையாக அமல்டுத்துவதாக அறிவித்திருந்தார்.
இதைனையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு போலீசார், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள், என்ஜின் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததுடன் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், தடைசெய்யப்பட்ட வலைகளை கொண்டு பிடிக்கப்பட்ட மீன்களையும், அவற்றை ஏற்றிச்செல்லும் லாரிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் மீனவர்கள்,
மயிலாடுதுறை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களின் அவசர ஆலோசனை கூட்டத்தை தரங்கம்பாடியில் நடத்தினர். இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் தரங்கம்பாடி, தொடுவாய், கூழையார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த அவசர கூட்டத்தின் முடிவில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 600 கண் வலையை பயன்படுத்தக்கூடாது எனவும், சிறு தொழில்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை ஆணையரிடம் வலியுறுத்துவது முடிவு செய்யப்பட்டது.
மேலும் மீன்வளத்துறையினர் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வலைகள், படகுகளின் நீளம், எஞ்சின் திறன் குறித்தான தொடர் சோதனையில் ஈடுபட்டால் நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் ஒன்று இணைந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.