’உடையாளுர் இராஜராஜ சோழன் நினைவாலயம்’ அகழாய்வு செய்யுமா அரசு..?
உடையாளுரில் உள்ள சிவலிங்கம் புதைந்த நிலையில் உள்ள இடத்தை தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுத் தடயங்கள் நிச்சயம் கிடைக்கும் என்பதை என் ஆய்வுகள் மூலம் மீண்டும் உறுதி கூறுகிறேன்.
கட்டுரை : S.K. ஸ்ரீதரன், செயலாளர்
மாமன்னன் இராசராசசோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம்
சோழர் வரலாற்றில் இருபெரும் சோழசக்கரவர்த்திகள் தங்களைக் கல்வெட்டுகளில் சிவனுடைய திருப்பாதங்களைத் தலையில் தாங்குபவர்கள் எனக் குறித்துக் கொண்டனர். முதலாமவன் மாமன்னன் இராஜராஜசோழன். இவன் தன்னுடைய சிலாசாசனங்களில் தன்னைச் ‘சிவபாதசேகரன்’ எனப் பொறித்துக் கொண்டான். இப்பெரும் வேந்தன் மைந்தனான கங்கையும் கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழனோ தன்னை ‘சிவசரண சேகரன்’ எனத் திருவலஞ்சுழி கல்வெட்டில் குறிப்பிட்டுக் கொண்டான். இவர்கள் வழித் தோன்றலான மூன்றாம் குலோத்துங்க சோழன் தென் திருவாலங்காடு சிவாலயத்தில் தன் தலைமீது சிவனாரின் திருவடிகளைத் (பாதர~கள்) தாங்கும் கோலத்தில் தன் உருவச் சிலையை இடம் பெறுமாறு செய்து கொண்டான். பண்டைய பழையாறை நகரின் ஒரு பகுதியாக விளங்கும் ஊர் ஒன்றுக்கு மாமன்னன் இராஜராஜன் ‘சிவபாதசேகரமங்கலம்’ எனப் பெயர் சூட்டியதோடு, அந்த ஊரிலேயே தன் இறுதிக் காலத்தைக் கழித்து, சிவபெருமானின் சேவடிகளை அடைந்தான் என்பது வரலாறு. அந்த சிவபாதசேகரமங்கலம் எனும் வரலாற்றுச் சிறப்புடைய ஊர்தான் கும்பகோணத்துக்கு அண்மையில் உள்ள உடையாளுர் எனும் சிற்றூராகும்.
கல்வெட்டுத்தூண்:
கீழப் பழையாறை எனும் ஊரினை அடுத்து திகழும் உடையாளுர் எனும் சிவபாதசேகர மங்கலத்தில் பண்டு பல சிவாலயங்கள் திகழ்ந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகளும், அவ்வாலயங்களின் எச்சங்களான சிவலிங்க திருமேனிகளும், பிற இறையுருவங்களும் இவ்வூரின் பல பகுதிகளில் திகழ்ந்து, தற்போது அவையனைத்தும் ஸ்ரீ கயிலாசநாதர் கோயிலின் திருச்சுற்று மண்டபங்களில் காட்சி நல்குகின்றன. முன்பு இவ்வூர் விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாகவும் பின்பு மண்டபங்களில் காட்சி நல்குகின்றன. முன்பு இவ்வூர் விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாகவும் பின்பு இடம்பெயர்ந்து தற்போது கயிலாசநாதர் கோயிலின் தீர்த்தக் குளத்தின் தென்கரையில் உள்ள பாற்குளத்து அம்மன் கோயிலின் நுழைவு மண்டபத் தூணாகவும் இடம் பெயர்ந்து திகழ்கின்றது. ஒரு வட்ட வடிவ கல்வெட்டுத்தூண். அத்தூணில் காணப்பெறும் முதற்குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு சிவபாதசேகரன் எனப் பெறும் முதலாம் இராஜராஜ சோழனின் பெயரால் சிவபாதசேகரமங்கலத்தில் அமைந்த சிவபாதசேகர தேவர் திருமாளிகை பற்றிய அரிய குறிப்பினைக் கூறுவதோடு மேலும் பல முக்கியமான வரலாற்றுச் செய்திகளையும் எடுத்துரைக்கின்றது.
அக்கல்வெட்டு முழுவதையும் நாம் படிக்க முயலும்போதுதான் அதன் சிறப்பினை உணர முடியும். அத்தூணில் உள்ள கல்வெட்டு வாசகமாவது, ‘ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பத்திரண்டாவது ஸ்ரீ சிவபாதசேகர மங்கலத்து எழுந்தருளி நின்ற ஸ்ரீ ராஜராஜ தேவரான ஸ்ரீ சிவபாதசேகர தேவர் திருமாளிகை முன்பில் பெரிய திருமண்டப முன்பில் எடுப்பு ஜீ நத்தமையில் இம்மண்டபம் எடுப்பத்தார். பிடவூர் வேளான வேளிர் அரிகேசவனான கச்சிராஜர்காக இவ்வூர் (நா)யகம் செய்துநின்ற ஜயசிங்க குலகால வளநாட்டு குளமங்கலநாட்ட சாத்(த)மங்கலத்து சாத்த மங்கலமுடையான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ(வரு)டன் விரதங்கொண்டு செய்தார் இ(வ்வூ)ர் பிடாரர்களில் ராஜேந்திரசோழனு(க்க) பநாயகநான ஈசான சிவரும் தேவ(கநா)யகமான அறங்காட்டிப் பிச்சரும்” என்பதாகும். (தற்போது பாற்குளத்தம்மன் கோயிலில் காணப்பெறும் இக்கல்வெட்டுத்தூண் பண்டு சிவலிங்கம் புதைந்திருந்த வாழைத்தோட்டத்திலும், பின்பு உள்ளுர் திருமால் ஆலயத்திலும் இடம் பெற்றிருந்த ஒன்றாகும்.)
இச்சாசனத்தின் அடிப்படையில் நோக்கும் போது முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்திரண்டாவது ஆட்சியாண்டில் (கி.பி.112) ஸ்ரீ சிவபாதசேகரமங்கலத்தில் (உடையாளுரில்) ராஜராஜதேவரின் திருவுருவம் திகழ்கின்ற ஸ்ரீ சிவபாதசேகர தேவர் திருமாளிகை என்ற பெயரில் மாளிகை ஒன்று இருந்துள்ளது. அம்மாளிகையின் முன்பகுதியில் அமைந்திருந்த மண்டபப்பகுதி சிதைவு அடைந்து காணப்பெற்றதால் பிடவூர் எனும் ஊரினைச் சார்ந்த பிடவூர் வேளாண் வேளிர் அரிகேசவனான கச்சிராஜர் என்பவர் அப்பகுதியினை மீண்டும் எடுப்பித்து புனர்நிர்மாணம் செய்தார். அப்போது அவர் செய்த பணிக்கு ஜெயசிங்க குலகால வளநாட்டு குளமங்கல நாட்டின் ஓர் ஊரான சாத்தமங்கலம் எனும் ஊரினான நம்பிடாரன் நாடறி புகழன் எனும் சிவபாதசேகரமங்கலத்து அரசு நிருவாக அலுவலனும், அவனுடன் இணைந்து சிவபாதசேகரமங்கலத்து பிடாரர்களில் (சிவாச்சாரியர்களில்) ஒருவனான ராஜேந்திர சோழ அணுக்க நாயகனான ஈசான பண்டிதரும், அறங்காட்டி பிச்சர் என்பவரும் விரதம் இருந்து மேலே குறிப்பிட்டுள்ள கச்சிராஜருக்காக இப்பணியைச் செய்தனர் என்பது குறிக்கப் பெற்றுள்ளது. விரதம் இருந்து திருப்பணி செய்தமையால் அம்மாளிகை புனிதமுடைய ஒரு கோயிலாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
வரலாற்றுச் சிறப்புடைய இக்கல்வெட்டு சாசனத்தால் உடையாளுரில் முதலாம் இராஜராஜ சோழனின் திருவுருவம் எழுந்தருளப் பெற்ற ஒரு மாளிகை பண்டு இருந்தது என்பது உறுதியாகின்றது. அது முதலாம் இராஜராஜ சோழனின் நினைவு மாளிகையே, அதனைப் பள்ளிப்படை (சமாதி கோயில்) எனக் கருத வாய்ப்புள்ளது. அந்த மாளிகை உடையாளுரின் எப்பகுதியில் இருந்தது என்பது இதுகாறும் ஐயம் திரிபற உறுதி செய்ய இயலவில்லை. உள்ளுர் ஆற்றங்கரை அருகில் ஒரு வாழைத்தோட்டத்தில் புதைந்த நிலையில் காணப்பெறும் சிவலிங்கம் திகழும் இடமே அப்பண்டைய மாளிகை என்பது அமரர் என்.சேதுராமன் என்ற ஆய்வு அறிஞரின் முடிவாகும். திருவாளர்கள். வே.மகாதேவன், சிவபாதசேகரன் போன்றவர்கள் தற்போது உடையாளுரில் திகழும் ஸ்ரீ கயிலாசமுடையார் திருக்கோயிலே இராஜராஜனின் பள்ளிப்படை எனக் கருதுகின்றனர். ஆனால், இங்கு குறிப்பிடப்பெற்றுள்ள (கல்வெட்டு) தூண்கள் முற்காலத்தில் வாழைத்தோட்டத்து சிவலிங்கம் அருகில் திகழ்ந்ததாக 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் அவ்வூரில் சந்தித்த 85 வயதுடைய பெரியவர் ஒருவர் மூலம் அறிந்தேன். பின்பு அத்தூண்கள் விஷ்ணு ஆலயத்திற்கு கொண்டு வந்ததாகவும், பிறகு பாற்குளத்து அம்மன் கோயிலுக்கு இடம் பெயர்ந்ததாகவும் கூறினார். இக்கல்வெட்டை 1927இல் இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறையினர் படி எடுத்துள்ளனர்
கயிலாசநாதர் கோயில் குலோத்துங்க சோழன் காலத்தில் முழுவதுமாகப் புதிதாக எடுப்பிக்கப்பெற்ற கற்றளியாகும். கருவறையில் கயிலாசநாதர் லிங்க வடிவில் காட்சி நல்க கருவறை நுழைவாயிலினை இரு துவாரபாலகர் சிற்பங்கள் காத்து நிற்றன. இவ்விரு சிற்பங்களும் வேறு எங்கும் காண இயலாத தனிச்சிறப்புகளுடன் திகழ்கின்றன. வாயிலின் வலப்புறம் உள்ள துவாரபாலகரின் காலடியில் மிதிக்கப்பெற்ற தலையுடன் திகழும் அமர்ந்த கோல அடியார் சிற்பமொன்றுள்ளது. அவர்தம் இரு கரங்களையும் கூப்பிய நிலையில் காணப்பெறுகின்றார். இடப்புறம் உள்ள துவாரபாலகரின் காலடியில் தலையில் ஜடாபாரத்துடன் உள்ள வணங்கும் கோல அமர்ந்த அடியார் ஒருவரின் திருவுரும் உள்ளது. இவ்வடியார்கள் இருவரும் யாவர் என்பதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் கிடைக்கவில்லை. அவை இராஜராஜன் மற்றும் இராஜேந்திரனையோ அல்லது அவ்வூரில் திகழ்ந்த மடாதிபதிகளையோ குறிப்பதாக இருக்கலாம். அர்த்த மண்டபத்தின் தென்புறம் வணங்கும் கோல ஒரு அரசன் மற்றும் அரசி ஆகிய இருவரின் முழு உருவ சிற்பங்கள் (பிரதிமங்கள்) இடம் பெற்றுள்ளன. அவை கலையம்சத்தால் முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை என்பதால் அவை குலோத்துங்கன் மற்றும் அவன் தேவியின் வடிவங்களாக அச்சிற்பங்களைக் கொள்ள முடிகிறது. மகாமண்டபத்திற்கு வெளியே ஒரு சிறுமண்டபத்தில் லிங்கம் ஒன்றினை நின்ற நிலையில், ஜடாபாரத்துடனும், மீசையுடனும் வணங்கும் கோல அடியார் ஒருவரின் சிற்பம் காணப்பெறுகின்றது. அது சிவபாத சேகரனாகிய முதலாம் இராஜராஜனைக் குறிப்பதாக இருக்கலாம். எனவே, கயிலாசநாதர் கோயிலில் இராஜராஜன் அல்லது அவன் மகன் இராஜேந்திரன் காலத்து எந்த கல்வெட்டுகளும் இல்லாததால் அக்கோயிலை சிவபாத சேகர தேவர் எழுந்தருளி நின்ற திருமாளிகை என்று கூற இயலாது.
கி.பி.1014 இல் தன் மகன் இராஜேந்திரசோழனிடம் அரச பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு பழையாறையில் இருந்த சோழன் மாளிகையில் (சோழன் மாளிகை என்ற பெயரில் இவ்வூர் பட்டீச்சரம் அருகில் இன்றும் உள்ளது). தங்காமல் சிவபாதசேகரமங்கலம் எனும் உடையாளுரில் தங்கி சில மாதங்கள் வரை ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டிருந்த இராஜராஜ சோழன் அந்த ஊரிலேயேதான் சிவபதம் அடைந்திருக்க எல்லாவித சாத்தியக் கூறுகளும் உள்ளன. எனவே, அவர் மறைந்தபிறகும் அவர்தம் திருவுருவத்துடன் ஒரு நினைவு மாளிகையை அவ்வூரில் இராஜேந்திர சோழன் எடுத்திருக்க வேண்டும். அதைத்தான் பாற்குளத்து அம்மன் கோயிலில் தற்போது இடம் பெற்றுள்ள முதற்குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு “ஸ்ரீ சிவபாதசேகரமங்கலத்து எழுந்தருளி நின்ற ஸ்ரீ ராஜராஜ தேவரான ஸ்ரீ சிவபாதசேகர தேவர் திருமாளினை” - என்று கூறுகிறது. இக்கல்வெட்டு இராஜராஜனின் பேத்தியும், இராஜேந்திரனின் மகளுமான அம்மங்கைதேவியின் மகனான குலோத்துங்க சோழ தேவரின் அதிகாரிகளால் வெட்டப்பெற்றதாகும். அக்கல்வெட்டில் மேற்குறிப்பிட்ட வாசகம் காணப்பெறுவதால் இம்மாளிகை முதலாம் இராஜராஜ சோழனுக்காக எடுக்கப்பெற்ற நினைவு மாளிகையாக (பள்ளிப்படைக் கோயிலாக) நாம் கொள்ள வேண்டும். எனவே, முடிகொண்டான் ஆற்றங்கரை அருகே உள்ள வாழைத்தோட்டத்தில் தற்போது புதைந்த நிலையில் உள்ள சிவலிங்கம் உள்ள இடமே அந்நினைவாலயம் என உறுதியாக நம்பலாம். அத்தோட்டத்தில் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் அகழ்வாய்வு செய்தால் மேலும் பல தடயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
பள்ளிப்படை பஞ்சவன்மாதேவீச்சரம்:
உடையாளுர் அருகேயுள்ள பட்டீச்சரம் எனும் ஊரில் (பழையாறையின் ஒரு பகுதி) தற்போது இராமநாதன்கோயில் என்ற பெயரில் அழகிய சோழர்கால கற்கோயில் ஒன்று உள்ளது. இது இராஜராஜ சோழனின் மனைவியருள் ஒருத்தியான பஞ்சவன்மாதேவி என்ற அரசி இறந்தபிறகு எரியூட்டி பின்பு அவளின் அஸ்தி கலசத்தை வைத்து எடுக்கப்பெற்ற பள்ளிப்படைக்கோயிலாகும். அக்கோயிலில் உள்ள இராஜேந்திர சோழனின் கல்வெட்டு அக்கோயிலை ‘பள்ளிப்படை பஞ்சவன் மாதேவீஸ்வரம்’ எனக் குறிக்கிறது. பண்டைய பழையாறை மாநகரின் நடுவே ஓடும் முடிகொண்டான் எனும் காவிரின் கிளை நதியின் கரைகளிலேயே பட்டீச்சரத்தில் பஞ்சவன்மாதேவீச்சரமும், உடையாளுரில் இராஜராஜ சோழனின் நினைவாலயமும் திகழ்ந்தன என்பது வரலாற்றுக் சான்றுகளால் உய்த்துணர இயலுகின்றது. இவற்றை மசானக்கோயில்கள் என்றும் பள்ளிப்படைகள் என்றும் கூறுவர். இராஜராஜனுக்கும் அவன் தேவி பஞ்சவன்மாதேவிக்கும் பள்ளிப்படைகள் என்றும் கூறுவர். இராஜராஜனுக்கும் அவன் தேவி பஞ்சவன்மாதேவிக்கும் பள்ளிப்படைகள் பழையாறை பகுதியிலே (உடையாளுர் மற்றும் பட்டீச்சரம்) உள்ளமையை அங்குள்ள கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. எனவே, உடையாளுரில் உள்ள வாழைத்தோட்டத்தில் சிவலிங்கம் புதைந்த நிலையில் உள்ள இடத்தை அரசின் தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுத் தடயங்கள் நிச்சயம் கிடைக்கும் என்பதை என் ஆய்வுகள் மூலம் மீண்டும் உறுதி கூறுகிறேன்.