ரேஷன் கடையில் மீண்டும் பயோமெட்ரிக் முறை- பொங்கல் பரிசு வினியோகத்தில் சிக்கல்!
மயிலாடுதுறை மாவட்ட ரேஷன் கடையில் மீண்டும் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தி பொங்கல் பரிசு வழங்குதல் கொரோனா பரவும் ஆபத்து உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ‘பயோமெட்ரிக்’ எனப்படும், கைவிரல் ரேகை பதிவு முறையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அரசின் விலையில்லா பொருட்கள் பெற ரேஷன் கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி பொருள்களை பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் தமிழ்நாட்டின் மூன்றாம் அலையின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று காலையில் மீண்டும் கை ரேகை (பயோமெட்ரிக்) பதிந்து குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை வாங்க பயோமெட்ரிக் முறையை நடைமுறை படுத்தி உள்ளனர். இதனையடுத்து மயிலாடுதுறை கூட்டுறவு சிறப்பு அங்காடியில் காலை முதல் பயோமெட்ரிக் முறையில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய 4 தாலுக்காகளிலும் மொத்தம் 2,71,107 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை கைரேகை பதிவு (பயோமெட்ரிக்) முறை பயன்படுத்தி வழங்கி வருகின்றனர். பொங்கலுக்கு இன்னும் ஓரு நாட்களே உள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க வரிசையில் நின்று வருகின்றனர்.
Watch Video: ‛வெல்லம் உருகுதய்யா... விடியல் ஆட்சியிலேயே.. ’மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் வைரல் ட்வீட்!
மேலும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பெரும்பாலான மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை பெற்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி வழங்குவதால் மேலும் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மீண்டும் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்து பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.