வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
விஜய் தனியாக நின்று ஆட்சி அமைப்பாரா என யாராலும் நம்ப முடியாது. வாக்குறுதிகள் நன்றாக இருக்கிறது என பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் பெண்களுக்காக ஓடோடி சென்று வாக்குறுதிகள் அளிப்பதை ஒரு பெண் தலைவராக நான் வரவேற்கிறேன் என பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலம் உள்ளது. இப்படியான நிலையில் திமுக, அதிமுக என ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் பெண்கள் வாக்கை கவரும் வகையில் பல அறிவிப்புகளை கொடுத்துள்ளது. மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர், தாய்மாமன் சீர் திட்டம், திருமணமாகும் பெண்களுக்கு ஒரு சவரன் நகை மற்றும் பட்டுப்புடவை, தமிழகம் முழுவதும் இலவச பேருந்து பயணம் என வாக்குறுதிகளை அள்ளி வீசினார். விஜயின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும், விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களைகளை வானதி சீனிவாசன் சந்தித்த நிலையில் அவரிடம் விஜய் கொடுத்த வாக்குறுதிகள் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு, “விஜய் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்காக ஸ்பெஷல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். சினிமாவில் தீபாவளி ஸ்பெஷல், பொங்கல் ஸ்பெஷல் வருவது போல மகளிர் ஸ்பெஷலை அறிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக எல்லா அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகளை அளிப்பது என்பது வழக்கமான நடைமுறை தான். ஆனால் புதிதாக வந்திருக்கக்கூடிய அரசியல் இந்தளவுக்கு வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றால் நிச்சயமாக ஆட்சிக்கு வரும் அளவுக்கு அவர்களுக்கு வாக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு வரும்.
விஜய் தனியாக நின்று ஆட்சி அமைப்பாரா என யாராலும் நம்ப முடியாது. வாக்குறுதிகள் நன்றாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் பெண்களுக்காக ஓடோடி சென்று வாக்குறுதிகள் அளிப்பதை ஒரு பெண் தலைவராக நான் வரவேற்கிறேன். ஏனென்றால் ஒரு காலத்தில் பெண்கள் வாக்காளர்கள். இன்று அரசியல் அதிகாரத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லா கட்சிகளின் அறிக்கையைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.
திமுக,அதிமுக இதுவரை தமிழகத்தை ஆண்டவர்கள். அவர்களுக்கென ஒரு வரலாறு இருக்கிறது. அவர்கள் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என கேட்க முடியும். விஜயும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ஆட்சிக்கு வரப்போவதில்லை. வந்தால் பார்க்கலாம். ஒரு பெண்ணாக விஜய் சொன்னதை வரவேற்பேன். ஆனால் வாய்ப்பு இருக்கா என கேட்டால், வாய்ப்பில்ல ராஜா என்று தான் சொல்வேன்” என கூறினார்.
தொடர்ந்து விஜய், சங்கீதா விஷயம் பற்றி பேசிய வானதி, “ஒவ்வொரு தலைவருமே அவர்களின் தனிமனித ஒழுக்கம், ஒவ்வொரு விஷயத்தை அணுகுமுறை, கொடுக்கும் வாக்குறுதி, பேசக்கூடிய வார்த்தைகளில் இருந்து தான் உண்மை என்பது தெரிய வரும். அதனால் ஒரு தலைவருடைய வாழ்க்கை தனிப்பட்டது என்றாலும் கூட அதில் எப்படி நடக்கிறார் என்பதை பொறுத்து தான் நாம் பேச முடியும்” என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















