தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உபரி பட்ஜெட்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதம்
தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ. 30 கோடிக்கு மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ. 412 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேயர் சண்.ராமநாதன்.

தஞ்சாவூர்: தொடர்ந்து நான்காம் முறையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ. 7.47 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்றச் சிறப்பு கூட்டத்தில் ரூ. 7.47 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேயர் சண். ராமநாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 2026 - 27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கணக்குக் குழுத் தலைவர் சி. வெங்கடேஷ் தாக்கல் செய்து பேசுகையில், பெருகி வரும் மக்கள்தொகை உயர்வுக்கேற்ப நாள்தோறும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், அடிப்படை வசதிகள் தட்டுப்பாடின்றி உடனடியாக கிடைக்கும் வகையிலும் 2026 -27ம் ஆண்டில் வரவு - செலவு திட்ட மதிப்பீடு, நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வருவாய் மூலதன நிதியில் 2026 - 27 ஆம் ஆண்டுக்கு ரூ. 377.11 கோடி வரவாகவும், ரூ. 372.27 கோடி செலவாகவும், ரூ. 4.84 கோடி உபரியாகவும் உள்ளது. இதேபோல, 2026 - 27ம் ஆண்டுக்கு குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ. 30.59 கோடி வரவாகவும், ரூ. 30.38 கோடி செலவாகவும், ரூ. 2.17 கோடி உபரியாகவும், கல்வி நிதியில் ரூ. 4.83 கோடி வரவாகவும், ரூ. 2.41 கோடி செலவாகவும், ரூ. 2.41 கோடி உபரியாகவும் உள்ளன.
மொத்தத்தில் வருவாய் மூலதன நிதியில் ரூ. 4.84 கோடியும், குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ. 2.71 கோடியும், கல்வி நிதியில் ரூ. 2.41 கோடியும் என மொத்தம் ரூ. 7.47 கோடி உபரியாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்றார்
இதையடுத்து, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், கூட்டம் முடிவடைந்தாகவும் மேயர் சண்.ராமநாதன் அறிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
4 ஆண்டுகளாக உபரி பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை
பின்னர் நிருபர்களை சந்தித்த மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், கடந்த 2023- 24 ஆம் ஆண்டில் ரூ. 4.42 கோடியும், 2024 } 25 } இல் ரூ. 20.24 கோடியும், 2025 } 26 } இல் ரூ. 15.38 கோடியும், வருகிற நிதியாண்டில் ரூ. 7.47 கோடியும் என தொடர்ந்து 4 ஆண்டுகளாக உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020 - 21 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ. 30 கோடிக்கு மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ. 412 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இக்கூட்டம் பட்ஜெட் சிறப்பு கூட்டம் என்பதால், மற்ற தீர்மானங்களை பேசுவது சபை மரபில்லை. மற்ற கூட்டங்களைப் போல இதில் பேச முடியாது. சாலைப்பணிகள் முழுமையாக முடிய உள்ளன. 90 சதவீதத்திற்கும் மேல் சாலைகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் குடிநீர் வழங்குவதிலும் எவ்வித தட்டுப்பாடும் இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் தற்போது குடிநீர் பிரச்சினை இல்லை. தேவையை விட அதிகமாகவே உள்ளது. இதனால் கோடைகாலத்தில் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்படவே ஏற்படாது என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். இதேபோல் மக்களின் அடிப்படை தேவைகளையும் முழுமையாக செய்து கொடுத்துள்ளோம்.
உபரி பட்ஜெட் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாநகராட்சியில் உபரி பட்ஜெட்தான் தாக்கல் செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் கடன் இல்லாத மாநகராட்சியாக தஞ்சாவூரை அனைவரின் ஒத்துழைப்புடன் மாற்றி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















