Watch Video: ‛வெல்லம் உருகுதய்யா... விடியல் ஆட்சியிலேயே.. ’மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் வைரல் ட்வீட்!
வெல்லம் உருகுதய்யா விடியல் ஆட்சியிலேயே என்று கிண்டல் பாடல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஆளுங்கட்சியை வம்புக்கு இழுத்துள்ளார் மாஜி அமைச்சர் டி.ஜெயக்குமார்.
வெல்லம் உருகுதய்யா விடியல் ஆட்சியிலேயே என்று கிண்டல் பாடல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஆளுங்கட்சியை வம்புக்கு இழுத்துள்ளார் மாஜி அமைச்சர் டி.ஜெயக்குமார்.
அந்த ட்வீட்டை நீங்களும் பாருங்களேன்..
வெல்லம் உருகுதய்யா விடியல் ஆட்சியிலே...
— DJayakumar (@offiofDJ) January 11, 2022
நியாயவிலைக் கடைகளில் விடியா அரசின் வடியும் வெல்லம். pic.twitter.com/QQZKuMUN12
முன்னதாக நேற்று, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பொங்கல் பொருட்கள் தரக்குறைவு குறித்து மக்கள் கூறிய குறைகள் அடங்கிய வீடியோவை தனது Tabல் காட்டிப் பேசினார்.
அப்போது அவர், ”தமிழகத்தில் பல இடங்களில் நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு இருக்கிறது. பொதுமக்களுக்கு வழங்கப்படவேண்டிய இரண்டரை டன் வெல்லம் மிக மோசமாக, தரமற்று இருக்கிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர்களே ஆய்வு செய்து ரத்து செய்துள்ளனர் என்ற தகவல்கள் எல்லாம் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது. ஓமலூரில் ரேஷன் கடையில் தரமற்ற வெல்லம் கொடுத்திருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் எப்படி பொங்கல் வைக்கமுடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.
அரசு எந்தப் பொருள்களை கொள்முதல் செய்து விநியோகம் செய்கிறதோ அதைத்தான் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வழங்குகின்றனர். எனவே, அவர்களை குறைசொல்வதில் எவ்விதப் பயனும் இல்லை. இந்த அரசு பொறுப்பேற்றவுடன், 4,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய 14 அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கியது. அப்போது யாராவது குறை சொன்னார்களா என்றால் இல்லை. ஏனெனில், அப்போது குறையில்லை, இப்போது குறை இருக்கிறது. அதைத்தான் சொல்கிறார்கள்.
இதிலே மற்றுமொரு குறை என்னவென்றால், பெரும்பாலான பொருட்கள் வட மாநிலங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் தான் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்பது தான் யதார்த்தம்.
பொங்கல் தொகுப்பு குறித்த மக்களின் புகார்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு. எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தத் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும், குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இன்று மாஜி அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது பங்குக்கு தமிழக அரசுக்கு ஒரு குட்டு வைத்துள்ளார்.
பொங்கல் தொகுப்பு குறித்த சர்ச்சைகளை அதிமுக கையிலெடுத்துள்ளது.