வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு; தஞ்சையில் பெண்கள் சாலை மறியலால் பரபரப்பு
ராணி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பல்வேறு கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
தஞ்சாவூரில் ராணி வாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றும் பணி தொடங்கின. இதற்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூரில் ராணி வாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் உள்ள பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் வ.உ.சி.நகர், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் ராணி வாய்க்கால் மூலம் வடிந்து, இர்வின் பாலத்துக்கு கீழே குழாய் பதிக்கப்பட்டு கல்லணைக் கால்வாயை கடந்து, அழகி குளத்துக்கும், கோட்டை அகழிக்கும் செல்வது வழக்கம்.
காலப்போக்கில் இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளாலும், குப்பைகளாலும் அதன் தடமே இல்லாமல் காணப்பட்டது. இதையடுத்து இந்த வாய்க்காலை மீட்டு மீண்டும் சீரமைக்க வேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள பணிகள் தொடங்கியது. அதன்படி ரயில் நிலையத்திலிருந்து திவான் நகர் வழியாக இர்வின் பாலம் வரை, ராணி வாய்க்கால் தூர்வாரி கான்கீரிட் தளம் அமைக்கப்பட்டது. இந்த வாய்க்கால் தண்ணீரை தற்போது கல்லணைக் கால்வாயில் சேரும் வகையில் ஒரு பகுதி அமைக்கப்பட்டது.
தொடர்ந்து ராணி வாய்க்காலின் மற்றொரு பகுதி இர்வின் பாலம் முதல் ஆப்ரஹாம் பண்டிதர் சாலை வரை பலர் வாய்க்கால் மீது வீடு கட்டி வசித்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஓராண்டு காலமாக மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களிடம் வலியுறுத்தி வந்தனர். இதில் பலர் அங்கிருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
இந்நிலையில் நேற்று மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் உதவி பொறியாளர்கள் கண்ணதாசன், ஆறுமுகம் ஆகியோரது முன்னிலையில் பொக்லீன் இயந்திரம் மூலம் வாய்க்கால் மீது கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.
இதை கண்டித்து வீடுகளில் வசிக்கும் பெண்கள் ஆத்துப்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், எங்களுக்கு உடனடியாக குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும். வீடுகளில் உள்ள பொருட்களை எடுக்க ஒருநாள் காலஅவகாசம் வழங்க வேண்டும் என கேட்டனர். இதையடுத்து அவர்களுக்கு ஒருநாள் காலஅவகாசம் வழங்கி, வீடுகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் கூறுகையில், ராணி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பல்வேறு கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ராணி வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து இங்குள்ள வீடுகளில் வசிப்போருக்கு கடந்த ஓராண்டு காலமாக பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை. தற்போது பொக்லைன் இயந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. இதனை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாற்று இடம் வழங்கப்பட உள்ளது. கால அவகாசம் கேட்டதால், வீடுகள் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டு மீண்டும் தொடரும் என்றார்.