தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு காரணம் என்ன?
சீர்காழி அருகே மீன் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் அலி உசேன் என்பவருக்கு சொந்தமான தனியார் இரால்,மீன் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழில் சாலையில் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இருந்து மீன்கள் கொள்முதல் செய்து, அவற்றை பாய்லரில் வேகவைத்து அரைத்து நவீன முறையில் மீன் எண்ணெய் மற்றும் தீவனங்கள் தயார் செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இந்த தொழிற்சாலையில் ஏராளமான வெளி மாநிலத்தவர்கள் தங்கி பணி புரிந்து வருகின்றனர். இந்த சூழலில் நேற்று திடீரென தொழிற்சாலையில் அதிக அழுத்தம் காரணமாக பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததுள்ளது. பாய்லர் வெடித்த சத்தத்தை கேட்டு அங்கு பணிபுரியும் மற்ற ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை அமைந்துள்ள தொடுவாய் கிராமத்தில் இருந்து வந்து பார்த்ததில் பாய்லர் அருகில் பணியில் ஈடுப்பட்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரானா மற்றும் பல்ஜித்ஓரான் ஆகிய இருவரும் படுகாயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த பாய்லர் ஆபரேட்டர் உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த 53 வயதான ரகுபதி மற்றும் பந்தநல்லூரை சேர்ந்த 45 வயதான மாரிதாஸ், திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த 29 வயதான ஜாவித் ஆகிய 3 பேரையும் சக ஊழியர்கள் கிராம மக்கள் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரகுபதி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து அப்பகுதி கிராம வாசிகள் கூறுகையில் “இந்த தொழிற்சாலை ஆரம்பித்த நாள் முதல் சரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் நடைபெற்று வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், இங்குள்ள பிரச்னைகளை வெளியில் சொல்லாமல் மூடி மறைத்து இந்த தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நிர்வாகத்தின் அலட்சிய போக்கே தற்போது இரண்டு ஊழியர்கள் உயிரினத்திற்கு முழு காரணம். மேலும் இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் தொழிற்சாலை பாதுகாப்பினை உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து செயல்பட அனுமதி வழங்கவேண்டும். மேலும் இந்த விபத்துக்குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு விபத்துக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
EPS Press Meet: கள்ள ஓட்டுப் போட முயற்சி..! ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட இபிஎஸ்..!