புதுச்சேரி – கொல்லத்திற்கு தஞ்சை வழியாக ரயில் இயக்க சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தல்
கும்பகோணம், தஞ்சை, திருச்சி, மதுரை, தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என டெல்டா மாவட்ட ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்: புதுச்சேரியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், தென்காசி வழியாக கொல்லத்திற்கு நேரடி ரெயில்கள் இயக்க வேண்டும் என்று டெல்டா மாவட்ட ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை - கும்பகோணம் - விழுப்புரம் ரெயில் பாதை சுமார் 150 ஆண்டுகள் பழமையானது. இந்த பாதை வழியாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட தென் பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டதால் மெயின் லைன் பாதை என அழைக்கப்படுகிறது. கும்பகோணத்தை சுற்றிலும் கிராமங்கள் அதிகம். ரெயில் பயணம் நேரம் மற்றும் டிக்கெட் விலை குறைவு ஆகிய காரணங்களால் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர்.
கும்பகோணம் ரெயில் நிலையத்தின் வழியாக திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு பாசஞ்சர் ரெயில் சேவையும், புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கும், சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை வழியாக நாகர்கோவிலுக்கும், மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு பகல் நேர ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் பெங்களூரு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், புதுச்சேரியிலிருந்து கும்பகோணம், தஞ்சை, திருச்சி, மதுரை, தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என டெல்டா மாவட்ட ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் தரப்பில் கூறுகையில், இயற்கை எழில் கொஞ்சும் அஷ்டமுடி ஏரி, உலகிலேயே பெரிய பறவை சிற்பம் கொண்ட ஜடாயு எர்த் சென்டர், தங்கச்சேரி கலங்கரை விளக்கம், பாலருவி நீர்வீழ்ச்சி மற்றும் தென்மலை சூழல் சுற்றுலா ஆகும். மணற்பாங்கான கடற்கரைகள், படகு சவாரி மற்றும் அமைதியான தீவுகள், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை ஆகியவை மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்களாகும்.
குற்றால அருவிகள், காசி விஸ்வநாதர் கோவில், மற்றும் செங்கோட்டை அருகில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், புதுச்சேரி, பிரெஞ்சு காலனித்துவ கட்டிடக்கலை, ராக் பீச், அரோவில் பாரடைஸ் பீச், மணக்குள விநாயகர் கோவி ல் மற்றும் பிரெஞ்சு குடியிருப்புப் பகுதிகள், என இந்த பகுதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த இடமாக விளங்குகிறது.
ஆனால் இந்த பகுதிகளை இணைக்கும் வகையில் நேரடி ரெயில் சேவை இல்லை. இதனால் கொல்லத்தில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, கோவை மார்க்கமாக வரும் ரெயில்களில் திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து அங்கிருந்து புதுச்சேரி செல்லும் ரெயில்களுக்கு சென்று வருகின்றனர். மேற்கண்ட பகுதிகள் அனைத்தும் சீசன் காலங்களில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாடு, வெளிமாநில பயணிகளை ஈர்க்கிறது.
இந்த வழித்தடத்தில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டால், தமிழக – கேரளா – புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான ஆன்மீக மற்றும் சுற்றுலா பயணங்கள் அதிகரிக்கும். தற்போதுள்ள ரெயில்களில் காணப்படும் கடும் நெரிசல் குறையும். பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணம் செய்ய முடியும். இதன் மூலம் தென்னக ரெயில்வே துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், டெல்டா மாவட்ட மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்றனர்.























