ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
அமைச்சர் மெய்யநாதன் ஏபிபி நாடு-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் தனது தினசரி காலைப் பொழுது எப்படி செல்லும் என்பதை விவரித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஏபிபி நாடு-க்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
காலையிலே மக்கள் சந்திப்பு:
நான் எப்போதும் 4.30 மணிக்கு எழுந்துவிடுவேன். நடைபயிற்சி கண்டிப்பாக சென்றுவிடுவேன். இது எனக்கான நேரம். மக்கள் காலையிலே முக்கியமான பிரச்சினைகள் என்றால் வந்துவிடுவார்கள். அவர்களின் கோரிக்கைகளை கொடுப்பார்கள்.
அந்த கோரிக்கைகளை பரிசீலித்து அதிகாரிகளிடம் பேசி செய்து தருவோம். அனைத்து மனுக்களிலும் யார் என்ன வேலை செய்யனும்? என்று குறிப்புகள் இருக்கும். குறிப்பில்லாமல் ஒரு மனு கூட போகாது. எந்த அதிகாரியிடம் போக வேண்டும்? என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று இருக்கும். ரொம்ப முக்கியம் என்றால் MMM என்று எழுதுவேன். சிவப்பு நிற மையில் எழுதியிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலங்குடி இயற்கை வளம் மிகுந்த பகுதி.

இளையராஜா பாடல்கள்:
இளையராஜா பாடலுடன் சென்றால் அருமையாக இருக்கும். காலையிலே மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய பாடல்களை கேட்டுக்கொண்டே போவோம். 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை மிகுந்த மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இந்த பூக்களைப் பார்த்தாலே மனசு மாறும்.
நெஞ்சைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பாடலை அடிக்கடி கேட்பேன். நிறைய பாடல்கள். அனைத்துமே இளையராஜா பாடல்கள். அப்படியே மகிழ்ச்சியாக போவேன். இந்த இயற்கையோடும், பாடல்களுடனும் எங்கள் அதிகாலை பயணம் தொடங்குகிறது. இந்த நடைபயணம் அனைத்து மக்களையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு. மேலும், நாம் சந்திக்கும் மக்களிடம் அன்பாக, மகிழ்ச்சியாக பேசினால் அந்த நாளை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்ளலாம்.
நாட்களைச் செலவிடுவது எப்படி?
விடுமுறை நாட்களை தொகுதி மக்களுக்காக செலவிடுவேன். மற்ற மாவட்டங்களுக்கு, இடங்களுக்குச் செல்லும்போது அதிகாலையில் தொகுதி மக்களைச் சந்தித்துவிட்டு, திட்டங்கள் ஏதாவது தொடங்க வேண்டும் என்றால் கட்சி நிகழ்ச்சிகளை காலை 10 மணிக்கு முடித்துவிட்டு அடுத்த பயணத்திற்குச் சென்றுவிடுவேன். மாலையில் எப்போது எல்லாம் நேரம் கிடைக்கிறது அந்த நேரத்தை எல்லாம் தொகுதி மக்களுடன் செலவிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவர் ஆலங்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 10 ஆண்டுகாலமாக உள்ளார். இந்த முறை திமுக ஆட்சி அமையவும் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தற்போது இவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது காலை நடைபயணத்தின்போதும் மக்களை ஆங்காங்கே சந்தித்து, அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.























