EPS Press Meet: கள்ள ஓட்டுப் போட முயற்சி..! ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட இபிஎஸ்..!
கள்ள ஓட்டுப் போட முயற்சி செய்த வீடியோ காட்சிப்பதிவுகளையும் வெளியிட்டு பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் தேர்தலின்போது அதிக வன்முறைகள் நிகழ்ந்ததாகவும், கள்ள ஓட்டுப் போட முயற்சி செய்ததாகவும் வீடியோ காட்சிப் பதிவுகளை வெளியிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பழனிசாமி அளித்த பேட்டியில், “ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை. வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கும் என நம்புகிறோம். சென்னை, கோவை மாநகராட்சிகளில் தேர்தலின்போது, அதிக வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிகளவு கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளது. சென்னை, கோவையில் திமுகவினர் வாக்குச்சாவடிக்கு அருகிலேயே பணப்பட்டுவாடா செய்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், காவல் துறை டிஜிபி உள்ளிட்டோரிடம் அதிமுக சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விதிமீறல்கள் தொடர்பாக அதிமுக அளித்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை. சென்னை, கோவை மாநகராட்சிகளில், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்களை வெளியேற்ற வேண்டும். சென்னை திருவல்லிக்கேணியில் கள்ள ஓட்டுப் போட முயன்றவர்களை தடுத்த அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது ” என்று கூறினார்.
கள்ள ஓட்டுப் போட முயற்சி செய்த வீடியோ காட்சிப்பதிவுகளையும் வெளியிட்டு பழனிசாமி குற்றம்சாட்டினார்.
வாக்கு எண்ணும் நாளான வரும் 22ஆம் தேதி அதிமுக முகவர்கள் அவரவர் மையங்களுக்கு காலை 6 மணிக்கு முன்பாகவே செல்ல வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பழனிசாமி அறிவுறுத்தினார். மேலும், பதிவான வாக்குகளும் எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளதா என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும், தபால் வாக்குகள் எண்ணி முடித்து அறிவித்த பிறகுதான், வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் 43.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் கூறியுள்ளது. சென்னையில் மொத்தம் 61,73,112 வாக்காளர்கள் உள்ள நிலையில் 26,94,785 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
திருவல்லிக்கேணி தொகுதி 115 வது வார்டு திமுக வேட்பாளர் ஈஸ்வரி அவர்களின் கணவரும் திமுக 115 வட்டத்தின் வட்ட செயலாளர் வெங்கடேஷ் வாக்கு சாவடியில் கள்ள ஒட்டு போட முயன்றதை தடுத்த காவலரை தகாத வார்த்தைகளால் திட்டும் காட்சியை வெளியிட்ட இபிஎஸ்#ABP #EPS #admk pic.twitter.com/fcBD9LIvjT
— Kelikaimanidhan (@Sathishsv1906) February 20, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்