நீங்கள் உயரப் பறக்கும் பருந்துகள்.. பிறந்தநாள் விழாவில் குழந்தைகளுடன் உரையாடிய ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ரவி இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாளை ஒட்டி சென்னை ராஜ்பவனில் நடந்த விழாவில் அவர் குழந்தைகளுடன் உரையாடினார்.
தமிழக ஆளுநர் ரவி இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாளை ஒட்டி சென்னை ராஜ்பவனில் நடந்த விழாவில் அவர் குழந்தைகளுடன் உரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:
"குழந்தைகள்தான் இந்நாட்டின் எதிர்காலம். நான் எப்போதும் குழந்தைகளை சந்திப்பதையும் அவர்களுடன் உரையாடுவதையும் விரும்புவேன். குழந்தைகள், இளைஞர்கள் எப்போதும் எனக்கு முக்கியமானவர்கள். அவர்களுக்கு தனிச்சிறப்பான இடமுண்டு.
இந்த தேசம் உங்கள் மீது அளப்பரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளது. இந்த தேசம் உங்களை மிக உயர்வான இடத்தில் வைத்துப் பார்க்க விரும்புகிறது. உங்கள் பெற்றோர், நெருங்கிய சமூகத்தைத் தாண்டி உங்களுடைய வெற்றியில் மகிழ்ச்சி கொண்டு கொண்டாடுவது இந்த தேசம். தேசம் உங்களைக் கொண்டாடுவது உங்கள் அண்டை அயலாரையும் ஊக்குவிக்கும் அல்லவா? நீங்கள் எல்லோரும் இளம் பருந்துகள். வானில் உங்கள் சக்திவாய்ந்த சிறகுகளால் எல்லா பிரச்சனைகளையும் விலக்கி உயரப் பறக்கக் கூடியவர்கள் நீங்கள். உங்களுடைய வெற்றி இந்த தேசத்தை உலகரங்கில் உயரப் பறக்கச் செய்யும். எல்லாத் துறையிலும் உங்களுக்கு வெற்றி தரும்.
நீங்கள் உங்கள் திறமையைக் கண்டறிய வேண்டும். உங்களுக்குள் இருக்கும் திறனறிந்து அதை நோக்கி கனவுகளைச் செலுத்துங்கள். உங்கள் கனவுகள் மெய்ப்படச் செய்யுங்கள். அதற்கு நீங்கள் நேர மேலாண்மையை அறிந்திருக்க வேண்டும். நேரத்தை ஒழுக்கத்துடன் செலவழித்து உங்கள் இலக்கை அடைய வேண்டும்" என்று பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து:
Birthday Greetings to Hon'ble @rajbhavan_tn Thiru. R.N. Ravi.
— M.K.Stalin (@mkstalin) April 3, 2023
May he lead a long and healthy life.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். மேலும், நீண்ட ஆயுளோடு, ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது வாழ்த்துச் செய்தியில், “ தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கே.அண்ணாமலை தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீண்ட ஆயுளுடனும் நிறைவான ஆரோக்கியத்துடனும் தேசப் பணி தொடர, தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த ஆர்.என்.ரவி?
பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாக கொண்ட ஆர்.என்.ரவியின் முழுப்பெயர் ரவீந்திர நாராயண் ரவி. 1976 ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர். இவர் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.-யிலும் பணிபுரிந்துள்ளார்.
மத்திய அரசின் உளவுப்பிரிவான IB-யிலும் பணியாற்றிய இவர், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். 2012-ஆம் ஆண்டு காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர், பிரதமர் அலுவலகத்தில் உளவுப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டு தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2019-ஆம் ஆண்டு நாகலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.