Senthil Balaji Case: நிறைவுக்கு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல்.. உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு என்னவாக இருக்கும்..
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டிருந்த காவல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை சோதனை செய்தது. 17 மணி நேர சோதனைக்குப் பின்னர் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே, உடனே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை ஜூன் 28 ஆம் தேதி வரை காவலில் வைக்க சென்னை முதன்மை செஷனல் நீதிபது அல்லி உத்தரவிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், செந்தில் பாலாஜி ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு மருத்துவ குழுவின் முழுமையான கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரின் ஜூன் 21 ஆம் தேதி காலை 5 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஜூன் 28 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு காவல் நிறைவு பெற அவர் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் நலம் விசாரித்த நீதிபதி அல்லி அவரது காவலை ஜூலை 12 ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார். தற்போது வரை அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்றுடன் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நிறைவடைகிறது.
இது ஒரு புறம் இருக்க செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான இறுதி விசாரணை இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பில் மாறுபாடு இருந்த காரணத்தால், மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. நேற்று நீதிபதி சி.வி கார்த்திகேயன் அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபில் மற்றும் என்.ஆர் இளங்கோ இருவரும் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
அப்போது வாதிட்ட வழக்கறிஞர் கபில் சிபில், “செந்தில் பாலாஜியை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது" என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து வாதிட்ட வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "கைது, அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்து அதை கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டால், அது சட்டவிரோதம். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என இரு நீதிபதிகளும் கூறியுள்ளனர். செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின், நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதியின் இந்த நடைமுறை சரியானதல்ல” என குறிப்பிட்டார். இந்நிலையில் இன்று அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி தனது வாதத்தை முன்வைக்க உள்ளார். இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவல் முடிவடையும் நிலையில், ஆட்கொணர்வு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.