State Women Policy: மகளிருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! ஒப்புதல் அளித்த தமிழக அமைச்சரவை - லிஸ்ட்டை பாருங்க!
மத்திய அரசு 2001ஆம் ஆண்டு, மகளிர் கொள்கையைக் கொண்டு வந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு மாநில மகளிர் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்காப்புக் கலை பயிற்சி, கூடுதலாக 50 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய மாநில மகளிர் கொள்கைக்கு, தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 2001ஆம் ஆண்டு, மகளிர் கொள்கையைக் கொண்டு வந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு மாநில மகளிர் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநில மகளிர் கொள்கைக்கான வரைவுக் கொள்கை கடந்த 2021-ம்ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, கருத்துகள் கோரப்பட்டன. பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தற்போது முழுமையான கொள்கை வெளியிடப்பட உள்ளது.
எதற்காக மகளிர் கொள்கை?
பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரித்தல், அவர்களுக்கான தற்காப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல், கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி போன்றவை பெண்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்ய, திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
பெண்களுக்காக 24 மணி நேர உதவி எண்களைச் செயல்படுத்துவது, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றுடன் ஒட்டுமொத்தமாக பெண்களுக்கான வளர்ச்சி என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த கொள்கையில் இடம் பெற்றுள்ளன.
தற்காப்புக் கலைகள் பயிற்சி
அதேபோல பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைகள் பயிற்றுவிக்க மாநில மகளிர் கொள்கை வழிவகை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
19 வயது வரையிலான இளம் பெண்களுக்கு கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலா திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கல்வி இடைநிற்றலை குறைக்கவும் மகளிர் கொள்கையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவைதவிர ‘வாழ்ந்து காட்டு பெண்ணே’ என்ற திட்டம் மூலம் மகளிர் வங்கி தொடங்கப்படும். அதன்மூலம் பெண்களுக்குத் தேவையான கடனுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பெண்கள் புகார் அளித்த 24 மணி நேரத்துக்குள், குற்றங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, நிறுவனங்களில் 50 சதவீதப் பெண்கள் தலைமைப் பொறுப்பில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கவும் மகளிர் கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்கைக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விரைவில் முதலமைச்சர் வெளியிடுவார்
இதனை விரைவில் முதலமைச்சர் வெளியிடுவார் என்று மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இந்த கொள்கை பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.