Trump on FIFA: கனடா, மெக்சிகோவை பந்தாடும் ட்ரம்ப், ஃபிபா கால்பந்து குறித்து கூறியது என்ன.?
புகழ் பெற்ற ஃபிபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறுகிறது. இந்த 3 நாடுகளுக்கிடையே பிரச்னை உள்ள நிலையில், ஃபிபா குறித்து ட்ரம்ப் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாதான் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள். இந்த போட்டிகள், அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அடுத்த ஆண்டு ஃபிபா உலகக்கோப்பை போட்டிகளை, அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த 3 நாடுகளுக்கிடையே தற்போது வரிப் போர் நடைபெற்றுவரும் நிலையில், அந்த போட்டிகள் குறித்து ட்ரம்ப் என்ன கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம்.
2026 ஃபிபா உலகக்கோப்பை போட்டிகள்
உலக கால்பந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டிகளாகவும், கால்பந்து உலகின் உச்சபட்ச கோப்பையாக கருதப்படும் ஃபிபா உலகக்கோப்பை போட்டிகள் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த போட்டிகளில், 2026-ல் எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு 48 அணிகள் களமிறங்குகின்றன. மொத்தம் 104 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், அமெரிக்கா 78 போட்டிகளையும், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் தலா 13 போட்டிகளையும் நடத்துகின்றன. அதன் இறுதிப் போட்டி ஜூலை மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கு முன்னதாக, இந்த ஆண்டே, ஃபிபா கிளப்புகளுக்கு இடையேயான ஃபிபா கிளப் உலகக்கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளின் மூலம், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும், சுமார் 40 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வர்த்தகத்தில் தாக்கமும் ஏற்படும்.
போட்டிகள் அற்புதமாக இருக்கும் என கூறிய ட்ரம்ப்
ஃபிபா மற்றும் ஃபிபா கிளப் உலகக்கோப்பை போட்டிகளுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை கவனிப்பதற்காக, வெள்ளை மாளிகை சார்பாக உலகக்கோப்பை பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளிடையே வரிப் போர் நடந்துவரும் நிலையில், இந்த போட்டிகளில் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ட்ரம்ப், 3 நாடுகளுக்கும் இடையே பிரச்னைகள் இப்பதாலேயே, இந்த போட்டிகள் அற்புதமாக இருக்கும் என வித்தியாசமான பதிலை கூறியுள்ளார். “பதற்றம் என்பது ஒரு நல்ல விஷயம்... அதுவே இந்த தொடரை அற்புதமானதாக ஆக்கும்“ என ட்ரம்ப் கூறியுள்ளார். தற்போது அமைக்கப்பட்டுள்ள பணிக்குழுவின் மூலம், எல்லாம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வோம் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் புதிய வரிக் கொள்கை மற்றும் கனடா பிரதமர், மெக்சிகோ தலைவர்கள் குறித்து அவர் கூறிய கருத்துக்களால், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளுக்கிடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ட்ரம்ப் கூறியதுபோல், போட்டிகள் அற்புதமாக நடைபெறுகிறதா, அல்லது ஏதேனும் பிரச்னை எழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

