“தமிழகத்திற்கு இரண்டு சூரியன்கள்; அதில் ஒன்னு ஆளுநர் ரவி” - தருமபுரம் ஆதீனம் பேச்சால் பரபரப்பு
மயிலாடுதுறை வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பும், தேசிய கொடியை ஏந்தி ஆதரவு தெரிவித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்மீக பயணம் மேற்கொண்டார். முன்னதாக திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். அங்கு ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை, கஜ பூஜை செய்து சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் தரிசனம் மேற்கொண்டார்.
தொடர்ந்து மன்னம்பந்தல் வழியாக தருமபுரம் ஆதீனத்தை வந்தடைந்தார். அப்போது மன்னம்பந்தல் என்ற இடத்தில் தமிழக ஆளுநர் செல்லும் போது மீத்தேன் எதிர்ப்பு கூட்டணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கமிட்டு கோஷங்கள் எழுப்பினர். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எடுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதை கண்டித்தும், ஆளுநரை திரும்பச் செல்ல வலியுறுத்தியும் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டனர். அப்போது ஆளுநர் பார்வைக்கு போராட்டக்காரர்கள் படாத வகையில் காவல்துறை வாகனத்தை கொண்டு வந்து மறைத்தனர். அப்போது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியையும், பதாகைகளையும் ஆளுநர் செல்லும் சாலையில் எரிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, தருமபுர ஆதீனத்தை வந்தடைந்த தமிழக ஆளுநருக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் தேசிய கொடியை கையில் ஏந்தி வரவேற்பளித்தனர். தருமபுரம் ஆதீனம் வாசலில் கவர்னருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். ஆளுநருக்கு தருமபுரம் ஆதீனம் நடராஜர் உருவச்சிலை வழங்கினார்.
அதனை அடுத்து தருமபுரம் ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார். கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதினம் மடாதிபதி மற்றும் கவர்னர் பங்கேற்று பேசினார்கள். தொடர்ந்து தர்மபுரம் ஆதீனம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக யாத்திரையை ஆளுநர் துவக்கி வைத்தார். ஆளுநர் வருகையை முன்னிட்டு 1850 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக தர்மபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் உரையாற்றுகையில், தமிழக ஆளுநரின் பெயர் ரவி. ரவி என்றால் சூரியன் ஆகையால் தமிழகத்திற்கு இரண்டு சூரியன்கள் உள்ளன. மறதி ஒரு வரம். மறதி இருந்தால் மட்டுமே மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடியும், பசுக்களைப் பராமரிக்க வேண்டும். கால்நடைகளை சரியாக பராமரிக்காததால் கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால் தான் பண்பாடு மற்றும் கலாச்சார சீர் கெட்டுப் போயுள்ளது. அதனால் கல்வி நிலையங்களில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநரால் ரவி கூறுகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதால் தர்மபுரம் குருமகாசந்நிதானம் கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு உள்ளவர்களை பார்க்கும் போது உண்மையான இந்தியா என் கண்முன்னே தெரிகிறது. இந்திய நாடு வளமான நாடு. தருமபுரம் ஆதீனம் நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல்வேறு சேவைகளை ஆற்றி வருவது சிறப்பு கூறியது, குறிப்பாக இக்கட்டான சூழ்நிலைகளில் கொரோனா போன்ற இயற்கை இடர்பாடுகள், கார்கில் போர் நடைபெற்ற போது தாமாக முன்வந்து பல்வேறு உதவிகளை செய்தது பாராட்டுக்குரியது. இந்தியாவின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.
உலகில் உள்ள மக்கள் இயற்கை இடர்பாடுகள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அனுதினமும் சந்தித்து வருகிறார்கள். இதற்குத் தீர்வு நாகரீகம் கலாச்சாரம் கல்வி நீதி போதனைகள் பண்பாடு உள்ளிட்டவற்றால் மட்டுமே முடியும் என்றார். இந்தியாவில் எல்லோருக்கும் ஒரே கடவுள் சிவன் என்றும், மதத்தால், மொழியால், உணவால் இந்தியர்கள் பிரிந்திருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பம் என்று கூறினார். இந்தியாவினுடைய ஆன்மீகம் தமிழகத்திலிருந்து தொடங்கப்பட்டது அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தொடர்ந்து ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 96 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.