Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் 16 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 16,813 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 2,236 பேரும், அதைத் தொடர்ந்து சென்னையில் 1,223 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 358ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் 16 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 759 ஆக பதிவாகி உள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து 29 ஆயிரத்து 243 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 378 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்று காரணமாக 1 லட்சத்து 74 ஆயிரத்து 802 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்திற்கு வந்தது 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்
தமிழ்நாட்டில் கொரோனா பரவலில் இருந்து அனைவரும் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கடந்த சில தினங்களாக கூறி வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்ட்ராவில் இருந்து 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு இன்று வந்தது.
மானாமதுரையில் ஊரடங்கு விதிகளை மீறி பள்ளிவாசலில் தொழுகை
இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதை தங்களது மதக்கடமைகளில் ஒன்றாக கொண்டுள்ளனர். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், வழிபாட்டுத் தலங்களில் வழிபடுவதற்கு அனைத்து மதத்தினருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலில் இன்று ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்றாக கூடி தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து, தகவலறிந்த வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுரை கூறி வெளியேற்றினார்.
புதுச்சேரியில் கட்டுக்குள் வரும் கொரோனா
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 429 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 684 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது.
நடிகர் பாலசரவணனின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு
தமிழ்த்திரையுலகின் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் பாலசரவணன். குட்டிப்புலி, வேதாளம், அதே கண்கள், ஈஸ்வரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவருடைய தந்தை எஸ்.ஏ.ரெங்கநாதன். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்ப இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.