Special buses to operated in TN: முழு ஊரடங்கு; சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் விபரம்
மே 8 மற்றும் மே 9 (ஞாயிறு) ஆகிய நாட்களில் பயணிகளின் வசதிக்காக சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்ற நிலையில், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைப்படி தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, மே 10-ம் தேதி காலை 4 மணி முதல் மே 24-ம் தேதி காலை 4 மணி வரைஇரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் வழக்கம்போல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் மே 9-ம் தேதி காலை 11.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் பிற முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், முழு ஊரடங்கு காரணமாக, இன்றும் நாளையும் பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், மாநிலத்தில் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே 8 மற்றும் மே 9 (ஞாயிறு) ஆகிய நாட்களில் பயணிகளின் வசதிக்காக சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நாளை (ஞாயிறு) புறப்படும் பேருந்துகளின் விவரம்:
சென்னை – மார்த்தண்டம் – 6.00 pm; சென்னை – நாகர்கோவில் - 7.00 pm; சென்னை – தூத்துக்குடி - 7.00 pm; சென்னை – செங்கோட்டை - 7.30 pm; சென்னை – திருநெல்வேலி - 8.00 pm; சென்னை – திண்டுக்கல் - 8.00 pm; சென்னை – மதுரை - 11.30pm; சென்னை – திருச்சி - 11.45 pm

சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் நோய் தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளான, கட்டாயம் முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பொதுமக்கள், கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, www.tnstc.in இணையதளத்தில் மற்றும் tnstc official app ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.





















