மேலும் அறிய
Advertisement
''மனுசங்க பிழைக்க முடியாம தவிக்குறாங்க'' - 150 குடும்பங்களுக்கு காய்கறி, மளிகை பொருட்கள் கொடுத்த வியாபாரி
அரிசி, காய்கறி என 9 வகையான பொருட்கள் கொண்ட தொகுப்பை 150 குடும்பங்களுக்கு காய்கறி வியாபாரி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்துவருகிறது. அதில் முக்கியமாக தடுப்பூசியும் ஒன்று. நோய் தொற்று அதிகமாக இருப்பதால் பொது மக்களுக்குத் தடுப்பூசி போடுவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்திருக்கிறது தமிழக அரசு. சூழலை உணர்ந்த பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகளவு முன்வர துவங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட வீடியோவில், "ஊரடங்கினை நீடித்துக்கொண்டே செல்லமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அது மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என சூசகமாக தெரிவித்துள்ளார்.
தற்போது தளர்வுகள் ஏதுமின்றி ஒரு வாரத்திற்கு ஊரடங்கை என்ற நிலை நீடிக்கிறது. ஊரடங்கால் கூலித் தொழிலாளர்கள் பலரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே, தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் முதல் கட்டமாக ரூ.2,000 வழங்கப்பட்டது. அதோடு, தன்னார்வலர்கள் பலரும் முன்வந்து தங்களால் முடிந்த உதவிகளைப் பொதுமக்களுக்குச் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி சுமார் 150 குடும்பத்திற்கு அரிசி மற்றும் காய்கறி என 9 பொருட்களை வழங்கினார். இந்த செயல் தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து காய்கறி வியாபாரி ராஜாவிடம் பேசினோம்...," சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தம்பிபட்டி தான் என் ஊரு. மேட்டுப்பட்டி தெருவுலதே வீடு. 28 வருசாமா காய்கறி வியாபாரம் தான் செஞ்சுட்டு இருக்கேன். முக்கியமாக வாழக்காய்கள தோப்போட குத்தைக்கு எடுத்து சேல்ஸ் பன்றேன். இந்த கொரொனா இரண்டாவது அலையில மனுச, மக்க பிழைக்க முடியாம தவிக்குதுக. அவுக, அவுக பாடு ரெம்ப கஷ்டம். இந்த கஷ்டத்துல நம்ம பங்கும் இருக்கனும்னு யோசிச்சேன். சம்சாரிகளில் வெள்ளாமைய போட்டுட்டு கஷ்டபடுறதும் புரிஞ்சுச்சு. அதனால காகறி குடுக்கனும்னு முடிவுபண்ணேன். வாழக்கா, கத்திரிக்கா, பீட்ரூட், பீன்ஸ், மிளகா, தக்காளி, 2 கிலோ அரிசினு மொத்தம் 9 பொருள் குடுக்க முடிவு செஞ்சேன்.
திருப்பத்தூர் பகுதில ரெம்பவும் கஷ்டப்படுற 150 குடும்பங்கள தேர்வு செஞ்சு காய்கறி டோக்கன் குடுத்தேன். அந்த டோக்கன் அடிப்படையில எல்லாருக்கும் காககறி வழங்குனேன். நான் மரியாதை நிமித்தமாக கூப்டேனு திருப்பத்தூர் தாசில்தால் அம்மா ஜெயந்தி காய்கறி குடுத்து நிகழ்ச்சிய துவங்கிவச்சாக. என்னாலையும் பலருக்கும் உதவ முடிஞ்சதுனு சந்தோசபடுறேன். தொடர்ந்து அவ்வப்போது உதவி செய்ய திட்டம் இருக்கு. அதனால நிறையபேர் எனக்கு வாட்சப்ல வாழ்த்து சொல்லிட்டுவர்ராங்க’’ என்றார் மகிழ்ச்சியாக.
திருப்பத்தூர் தாலுகா தாசில்தார் ஜெயந்தி நம்மிடம்...," திருப்பத்தூர் பகுதியில் கொரோனா அதிகளவு இருந்தது. தற்போது முழு ஊரடங்கு காரணமாக நோய் தொற்று குறைந்துள்ளது. பொதுமக்கள் வெளியே சுற்றாத அளவிற்கு வேண்டிய உதவியை செய்கிறோம். வீடு, வீடாக சென்று கொரோனா டெஸ்டும் எடுக்கப்பட்டுவருகிறது. இந்த சூழலில் காய்கறி வியாபாரி ராஜா பொதுமக்களுக்கு உதவியாக இலவச பொருட்களை அவரது பணத்தில் இருந்து வழங்கினார். ஊக்கப்படுத்தும் விதமாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்’’ என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
இந்தியா
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion