மானை வேட்டையாட சென்றவர் மரணம்: உடலை ரகசியமாக எரித்த சம்பவம்! போலீஸ் விசாரணை
இறந்தவரின் உடலை யாருக்கும் தெரியாமல் எரித்ததால் ஊர் கவுண்டர் ஊர் முக்கியஸ்தர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதாக தெரிவித்துள்ளனர்..

மானை வேட்டையாடுவதற்கு சென்றவர் இறந்த நிலையில் அவரது உடலை ஊர்மக்கள் யாருக்கும் தெரியாமல் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு அடுத்த புங்கம்பட்டு நாடு நடுவூர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் ராஜேஷ் (35) மற்றும் பழைய பாளையம் பகுதியைச் சேர்ந்த சுருட்டையன் மகன் கோவிந்தன் (60) உள்ளிட்ட இருவரும் நேற்று இரவு மானை வேட்டையாடுவதற்கு சென்றுள்ளனர்.
அப்போது ஆண்டியப்பனூர் டேமிற்கு குடிநீர் அருந்த வரும் மானை வேட்டையாடுவதற்கு ராஜேஷ் புளிய மரத்தின் மீது ஏறியுள்ளார்.எதிர்பாராத விதமாக நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உடன் சென்ற முதியவர் கோவிந்தன் (60) அங்கிருந்து புங்கம்பட்டு நடுவூர் கிராமத்திற்கு சென்று உறவினர்களை அழைத்து வந்து இறந்த ராஜேஷின் உடலை டோலி கட்டி எடுத்து வந்துள்ளனர்.
பின்னர் இறந்த ராஜேஷின் உடலை அவரது உறவினர்கள் ஆதிகாலையில் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் வைத்து கட்டையை வைத்து எரித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பெயரில் புதூர்நாடு மலைக்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
எரிந்த நிலையில் இருந்த ராஜேஷின் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேட்டையாட உடன் சென்ற முதியவர் கோவிந்தனை திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேட்டையாட வைத்திருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிபொருள், டார்ச் லைட் உள்ளிட்ட பொருட்களையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இறந்தவரின் உடலை யாருக்கும் தெரியாமல் எரித்ததால் ஊர் கவுண்டர் ஊர் முக்கியஸ்தர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதாக தெரிவித்துள்ளனர்..
ட்ரெண்டிங் செய்திகள்























