Sasikala About J Death: ஜெ.தான் அப்படி சொன்னார்..! ஜெயலலிதா மரணத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை - சசிகலா
ஜெயலலிதா மரணத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாதது ஏன்? என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் பண்டிகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்றார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ ஒருவரை எதிர்க்க வேண்டுமென்றால், நான் பெண்ணாக இருந்தாலும் பெண் சிங்கமாக இருந்தோம். கருணாநிதி செய்யாத தொந்தரவா எங்களுக்கு? அந்த தொந்தரை எல்லாம் தாங்கி நாங்கள் இரண்டு பெண்மணிகளும் சாதித்து காட்டினோம். எதிர்த்து நின்று போராடினோம். நாங்கள் ஆட்சியை தாருங்கள் என்று மக்களிடம்தான் கேட்டோம். நாங்கள் சண்டையிடுவதற்கு பயந்து முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் கிடையாது. அதனால்தான் மக்களுக்கு எங்களால் நிறைய காரியங்களை செய்ய முடிந்தது. தமிழக மக்களும் அதைப் புரிந்து கொண்டனர்.
மறைப்பதற்கு எதுவும் இல்லை:
எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் எங்கள் கட்டுப்பாடா? அது மத்திய அரசு கட்டுப்பாடு. அவர்களது மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் மற்றும் எங்கள் அரசு மருத்துவர்ள் உள்ளனர். அவர்கள் தினமும் அம்மாவின் உடல்நிலை குறித்து அறிக்கை அளிக்கின்றனர். இதில் மறைப்பதற்கு எதுவுமே இல்லை. வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவர்களே அம்மாவிடம் கேட்டனர்.
அதற்கு அம்மா இல்லை வேண்டாம். எங்கள் மாநிலத்திலே சென்னை ஒரு மருத்துவ தலைநகரம். இங்கு இல்லாத மருத்துவ வசதிகள் கிடையாது. அதனால், எங்கள் மாநிலத்திலேயே அனைத்து வசதிகளும் உள்ளது. அதனால், மருத்துவர்களை இங்கே அழைத்து வரலாம் என்றார். எங்களுக்கும் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல ஆசை இருந்தது. ஆனால், அம்மா மிகவும் தெளிவாக இங்கேயே நன்றாக சிகிச்சை நடக்கிறது என்றார். அன்று கூட தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தார். நர்சுகளும் விருப்பப்பட்டு இருந்தனர்.
வீட்டுக்கு அழைத்துவர திட்டம்:
டிசம்பர் 19-ந் தேதி அம்மாவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நாள் பார்த்திருந்தோம். அங்குள்ள நர்ஸ் அனைவருக்கும் அன்பளிப்பு அளிக்க வேண்டும் என்று அம்மா சொன்னார். அதற்காக அவர்களுக்கான நகைகளை அம்மாவே தேர்வு செய்தார்கள். டிசம்பர் 15-ந் தேதியே எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் அவர்களிடம் கூறினாம்.
இன்னும் நான்கு மாதங்களுக்குள் தி.மு.க. 2 ஆண்டுகளை நிறைவு செய்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் அவர்களாக எதுவும் கேட்கவில்லை. நீங்கள்தான் கொடுக்கின்றனர். அதை செய்ய வேண்டுமல்லவா..? டி.வி.யில் விளம்பரம் செய்தால் மட்டுமே ஆட்சி கிடையாது. அதை செய்யாவிட்டால் மக்களே முடிவு செய்வார்கள். எந்தளவிற்கு ஒரு மனிதர் கஷ்டப்பட முடியுமோ அதை நானும், அம்மாவும் பட்டுவிட்டோம். அதையும் கடந்துதான் ஆட்சிக்கு வந்தோம்.
எதிர்க்கட்சி என்பதால் நான் திட்டுவது கிடையாது. அறிவுப்பூர்வமாக விஷயங்களை எடுத்துச்சொல்வேன். நேரடியாக அரசியலில் அமைச்சராக இல்லாவிட்டாலும், மக்களுக்கு என்ன செய்தால் உதவியாக இருக்கும் என்று அம்மாவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். அவரும், நானும் அமர்ந்து ஆலோசனை செய்துள்ளோம்” என்று கூறினார்.