சமூக நீதி நாளில் தீண்டாமைக் கொடுமை...மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த கடைக்காரர் கைது!
பட்டியலின குழந்தைகளிடம் “நீங்க யாரும் இங்க இனிமே தின்பண்டம் வாங்க வேண்டாம். எல்லாரும் ஸ்கூலுக்கு போங்க. யாரும் உள்ளூர்கடையில் தின்பண்டம் வாங்கக் கூடாது” எனக் கூறுகிறார்.
தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளத்தில் மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் தராமல் தீண்டாமையில் கடைக்காரர் ஈடுபட்ட சம்பவம் குறித்த வீடியோ முன்னதாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
View this post on Instagram
தன் கடைக்கு தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட வரும் பட்டியலின குழந்தைகளிடம் “நீங்க யாரும் இங்க இனிமே தின்பண்டம் வாங்க வேண்டாம். எல்லாரும் ஸ்கூலுக்கு போங்க. யாரும் உள்ளூர்கடையில் தின்பண்டம் வாங்கக் கூடாது” எனக் கூறுகிறார்.
தொடர்ந்து, ”என்ன கட்டுப்பாடு?” எனக் கேள்வி கேட்கும் குழந்தைகளிடம் “எங்க ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு. ஊரில் கூட்டம் போட்டு பேசியிருக்காங்க. உங்க தெருவுல யாருக்கும் கொடுக்கக்கூடாதுனு பேசியிருக்கு” எனக் கூறி அந்தக் குழந்தைகளை அனுப்பி வைக்கிறார்.
பள்ளிக்குழந்தைகளிடம் தீண்டாமை பார்க்கும் இந்த வீடியோ முன்னதாக இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஊர்க்கட்டுப்பாடு விதித்திருப்பதாகக் கூறி பட்டியிலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த கடை உரிமையாளர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் மகேஸ்வரனின் பெட்டிக்கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.