கிளியை கண்டுபிடித்துத்தந்தால் தக்க சன்மானம்... போஸ்டர் ஒட்டி கிளியை தேடும் நெகிழ்ச்சி சம்பவம்...!
4 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் கூட இறங்கவில்லை, அந்த சுற்றுவட்டாரம் முழுவதும் தேடிப் பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை- கிளியின் உரிமையாளர் அமீன்
ராமநாதபுரத்தை சேர்ந்த அமீன் என்பவர் பறவைகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். செல்லப்பிராணியாக உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு வகை கிளிகளையும் பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அதிக விலை கொடுத்து வாங்கி வளர்த்து வந்த கிரீனி கிளி ஒன்று காணாமல் போகவே, போலீசில் புகாரளித்துள்ள அவர், கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், கிளியை கண்டுபிடித்து தருமாறு, நோட்டீஸ் அச்சடித்தும் அவர் ஊர் முழுவதும் பொது இடங்களில் விநியோகித்து வருகிறார். செல்லப்பிராணி மீதான அவரது பாசம் காண்போரை வியக்க வைக்கிறது.
சிலருக்கு தங்களது வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, பறவைகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் திடீரென காணாமல் போனால் கையும் ஓடாது, காலும் ஓடாது. வீட்டில் உள்ளவர்கள் தொலைந்து போனால் எந்த அளவுக்கு கவலைப்படுவார்களோ அதே அளவிற்கான கவலையையும் அக்கறையையும் வாயிலா ஜீவன்களான தங்கள் செல்லப்பிராணிகள் மீது செலுத்துவர்.
'கிரிம்சன் பெல்லுடு கூலூர்' என்ற அரிய வகை வெளிநாட்டுக் கிளியை அமீனின் குடும்பத்தாரும் தன் வீட்டில் உள்ள ஒரு நபரைப்போல் பாசம் காட்டி இந்த கிளியை வளர்த்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கிளி காணாமல் போயுள்ளது. இதையடுத்து, கேணிக்கரை, அரண்மனை மற்றும் பழைய பேருந்து நிலையம் பாரதி நகர் என, ராமநாதபுரம் நகரின் முக்கிய பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் கிளி கிடைக்கவில்லை. இதனால் தனது கிளியின் புகைப்படத்துடன் தொடர்பு எண் விபரங்களையும் சேர்த்து துண்டு பிரசுரங்களாக அச்சடித்து வீடு வீடாக வழங்கியுள்ளார். கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் சுவரொட்டிகளும் ஒட்டியுள்ளார்.
இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிளிமீது கொண்ட அதீத அன்பு காரணமாகவே, அதை தேடுவதாக அமீன் வருத்தத்துடன் தெரிவிக்கிறார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இவர் ₹40 ஆயிரம் கொடுத்துப் பிறந்து 2 மாதமான இந்த செல்லக் கிளியை வாங்கியுள்ளார். ஒரு மாதத்திலேயே இந்த அமீனும் கிளியும் நெருக்கமாகி விட்டாராம் பெரும்பாலும் இந்த கிளிக்கு அமீன்தான் உணவு கொடுப்பாராம். இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன் திடீரென அந்தக் கிளி பறந்து காணாமல் போய் விட்டது. இதனால் அவர் மிகவும் கவலையடைந்துள்ளார்.
4 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் கூட இறங்கவில்லை. அந்த சுற்றுவட்டாரம் முழுவதும் தேடிப் பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அப்போதுதான் தனது கிளி பறந்துபோன விவரத்தை சுவரொட்டி அடித்து ஒட்டி விளம்பரம் செய்யலாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே அந்த கிளியின் புகைப்படங்களை இவர் எடுத்து வைத்திருந்தார். கிளியின் புகைப்படத்துடன் தனது சுவரொட்டி அடித்து, கிளியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அதில் அச்சிட்டு அது காணாமல் போன ராமநாதபுரம் நகர் முழுவதும் ஒட்டி விளம்பரம் செய்துள்ளார்.
பெற்ற தாய்தந்தையரை வயதான காலத்தில் பாரமாக நினைக்கும் பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நபர்களாக இருந்தால், தாங்கள் பெற்ற பிள்ளைகளை தனியார் காப்பகங்களில் சேர்த்து பயில வைக்கும் பெற்றோர்களையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கே ஒருவர் பணம் கொடுத்து வாங்கி வளர்த்த ஒரு கிளி காணாமல் போனதற்காக நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்து கண்டிபிடிக்க அவர் எடுக்கும் சிரத்தையைப்பார்த்தால் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.