CM Stalin - Cricketer Fraud: முதலமைச்சர் ஸ்டாலினையே ஏமாற்றிய போலி இந்திய கிரிக்கெட் கேப்டன்..! அமைச்சர் ராஜகண்ணப்பனால் அதிர்ச்சியில் தி.மு.க..!
பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றதாக கடையில் வாங்கிய கோப்பையைக் காட்டி, முதலமைச்சர் ஸ்டாலினை மாற்றுத்திறனாளி வீரர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றதாக கடையில் வாங்கிய கோப்பையைக் காட்டி, முதலமைச்சர் ஸ்டாலினை மாற்றுத்திறனாளி வீரர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோசடி கேப்டன்:
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழசெல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வினோத் பாபு, தன்னை சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய அணி கேப்டன் என உள்ளூரில் வலம் வந்துள்ளார். கடந்த மாதம் 26-ம் தேதி லண்டனில் 20 நாடுகள் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது தலைமையில் பங்கேற்ற இந்திய அணி , இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றதாக கூறியுள்ளார்.
முதலமைச்சர் உடன் சந்திப்பு:
பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணிக்காக கோப்பையை வென்றதாக கூறி உலா வந்த வினோத் பாபுவை ஊர்மக்கள் கொண்டாடியுள்ளனர். பின்னர் கோப்பையுடன் அமைச்சர் ராஜகண்ணப்பனைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். தனது தொகுதியைச் சேர்ந்த வினோத்பாபு இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருப்பதாக கருதி, வினோத்பாபுவை முதலமைச்சரிடம் அழைத்துச் சென்று வாழ்த்து பெற்றிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
உளவுத்துறைக்கு புகார்:
இந்த நிலையில் தான் மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது என வினோத் பாபு கூறியது எல்லாமே பொய் என சென்னை தலைமைச் செயலகத்திற்கு புகார் வந்துள்ளது. இதுதொடர்பான உளவுத்துறையின் விசாரணையில், புகாரில் தெரிவித்து இருப்பது அனைத்தும் உண்மை என தெரிய வந்துள்ளது.
நடந்தது என்ன?
இதுதொடர்பான விசாரணையில் “இந்தியாவில் மேற்கு வங்கம், ஜான்பூரில் நடந்த உள்ளூர் கிளப்பில் வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார். அங்கே இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவதுபோல் வீடியோ எடுத்து, தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் பாகிஸ்தானில் விளையாடியதாக கூறி நம்ப வைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியுள்ளார். தன்னுடைய அணி என அவர் அளித்த இந்திய அணியினரின் பெயர் பட்டியல் போலியானது என்பதோடு, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட பாகிஸ்தானுக்குச் செல்ல பல தனியார் நிறுவனங்களிடம் பணம் வசூலித்திருப்பதும்” தெரிய வந்துள்ளது. அதோடு, அமைச்சர் ராஜகண்ணப்பனையும் நேரில் சந்தித்து உதவி கேட்டு , வினோத் பாபு பணம் வாங்கியுள்ளார்.
அடிப்படை விசாரணை கூட இல்லையா?
உலக நாடுகளிலேயே இதுவரை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிகள் 10 கூட உருவாகவில்லை. ஆனால், இவர் 20 நாட்டு அணிகள் கலந்துகொண்டதாக வினோத் பாபு கூறியுள்ளார். அரசு வேலை வாங்குவதற்காக இந்த ஏமாற்று வேலையை வினோத்பாபு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அவருடைய செயல்பாடுகள் மற்றும் கோப்பையை பார்த்தாலே வினோத் பாபு உண்மைத்தன்மை இல்லாத, போலியான நபர் என தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
விசாரிக்காமலே முதலமைச்சர் வரை அழைத்துச் சென்றிருப்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். மோசடி நபர் ஒருவர் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டு, எந்த ஒரு அச்சமும் இன்றி தலைமை செயலகத்திற்கே வந்து முதலமைச்சரை சந்தித்து சென்ற சம்பவம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.