Seeman: தலைவிதி.. அணில் குஞ்சு.. விஜய்யை தாறுமாறாக கலாய்த்த சீமான்!
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யின் தவெக-வையும், தவெக கொள்கைகளையும், தவெக தொண்டர்களையும் கேலி செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்க திமுக, இழந்த ஆட்சியைப் பிடிக்க அதிமுக-வும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டின் வளரும் கட்சியான நாம் தமிழரும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை கொண்டுள்ளனர். இவர்களுடன் தமிழக அரசியலில் களமிறங்கியிருப்பவர் பிரபல நடிகர் விஜய்.
விஜய்யை விமர்சிக்கும் சீமான்:
நடிகர் விஜய்க்கு தொடக்க காலத்தில் உறுதுணையாக இருந்தவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு திராவிடமும், தமிழ் தேசியமும் தனது இரு கண்கள் என்று விஜய் அறிவித்த பிறகு சீமான் விஜய்யை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்.
தளபதி - தலைவிதி:
இந்த நிலையில், விழுப்புரத்தில் நேற்று நடந்த நாம் தமிழர் கூட்டத்தில் சீமான் நடிகர் விஜய்யையும், அவரது தமிழக வெற்றிக் கழகத்தையும் தாறுமாறாக விமர்சித்தார். அவர் பேசும்போது, என்னடா உங்க கொள்கைனு கேட்டேன். தளபதி, தளபதி, தளபதினு கத்துறாங்க.. அப்படி கத்தாதீங்கடா. எனக்கு கேட்கும்போது தலைவிதி, தலைவிதினு கேட்குது.
அது சரி, கொள்கை அப்படினு கேட்டால் தளபதி, தளபதினு சொல்றாங்க. சரி எதுக்குடா வந்தீங்கனு கேட்டால் டிவிகே, டிவிகேனு கத்துறாங்க. டேய்.. டீ விக்கவா இவ்வளோ பேரு கிளம்பி வந்திருக்கீங்க? சரிபா இப்படி ஓரமா போய் வித்துக்கோங்கபானு சொல்லிட்டேன். அணில் குஞ்சு புலி வெறிகொண்டு வேட்டையாடும்போது குறுக்கும், நெடுக்கும் ஓடுகிறது.
அணில்:
பத்திரம், பத்திரமா மரத்துல ஏறி போ. அணிலே, அணிலே ஓரமா போய் விளையாடு அணிலே. குறுக்கும், நெடுக்குமா வராத. ஒரு மானை, ஒரு காட்டெருமையை, ஒரு காட்டு ஆடை வேட்டையாடி சாப்பிட்டா புலிக்கு மரியாதை. அணிலைப் போய் வேட்டையாடுனா என்ன மரியாதை? என்னப்பா சரிப்பா போப்பானு.. யானை படுத்திருந்தா எலி ஏறி, ஏறி விளையாடும். ஒரு படையை தலைவன் வழிநடத்தினால் அந்த படை சரியாக இருக்கும். தலைவனையே ஒரு படை வழிநடத்தினால் விளங்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு அவருக்கு உறுதுணையாக இருப்பார் என்று கருதப்பட்ட சீமான், விஜய்யை தாறுமாறாக விமர்சித்து வருகிறார். விஜய் தனக்கு பக்கபலமாக திருமாவளவன் துணை வருவார் என்று கருதிய நிலையில், திருமாவளவன் திமுக கூட்டணியிலே தொடர்ந்து வருகிறார்.
விமர்சனங்களுக்கு பதில் தருவாரா விஜய்?
தற்போது வரை விஜய்யுடன் கூட்டணி சேர யாரும் முன்வராத நிலையில், அவர் தனது செல்வாக்கை மேம்படுத்த கிடைத்த மக்கள் நடத்திய பல போராட்டங்களில் பங்கேற்காமலே இருந்து வருகிறார். இதனால், விஜய் மீதான செல்வாக்கு சரிந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தனை விமர்சனத்திற்கு மதுரையில் நடக்கும் மாநாட்டில் விஜய் பதில் சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
சீமானின் இந்த பேச்சிற்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் சீமானின் இந்த பேச்சுக்கு அவரது ஆதரவாளர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் சீமானை விமர்சித்து வருகின்றனர்.





















