Medical Counselling: தொடங்கியது மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு.. எத்தனை இடங்கள்.. முழு விவரம் இதோ..
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் கலந்தாய்வு ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம், சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு 27,28 தேதிகளில் நேரடியாகவும் நடைபெறுகிறது.
2023 – 2024 ம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவப் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை விண்ணப்பிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டை விட 3994 கூடுதலாக விண்ணப்பித்துள்ளதால், மொத்தம் 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தரவரிசைப் பட்டியலும் மற்றும் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கான பட்டியலும் கடந்த ஜூலை 16ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார்.
அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 6326 எம்பிபிஎஸ் இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 1768 பிடிஎஸ் இடங்களும் உள்ளன.
7.5 சதவீதத்திற்கான உள் ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் கீழ் 473 எம்பிபிஎஸ் இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 133 இடங்களும் உள்ளன. மொத்தமாக நடப்பாண்டில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர்.
தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரியும், 21 சுயநிதி மருத்துவக்கல்லூரிகள், 13 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் என 71 மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த 71 மருத்துவக் கல்லூரிகளிலும் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 11475 இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 2150 இடங்களும் உள்ளது. இதற்கான கலந்தாய்வு இன்று ஆன்லைன் மூலம் தொடங்கியது.
காலை 10 மணிக்கு தொடங்கிய பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 31ம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஆன்லைன் பதிவு, கலந்தாய்வு கட்டணம் செலுத்துதல், விருப்பமான கல்லூரிகளை பதிவு செய்தல் போன்ற பணிகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். நீட் தேர்வில் 720 முதல் 107 மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் இதில் பங்கேற்க முடியும். ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் சீட் ஒதுக்கீடு பணிகள் நடைபெற்று ஆகஸ்ட் 3ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சேர்க்கைகான ஒதுக்கீட்டு ஆணைகளை ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 8ம் தேதி மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து, ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டுமென மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
சிறப்பு பிரிவினர்களுக்கு என்ற அடிப்படையில் 7.5% இட ஒதுக்கீட்டிற்கும், விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் போன்றவர்களுக்கு 27, 28 ஆகிய தேதிகளில் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நேரடியாக கலந்தாய்வு நடைபெறுகிறது.