முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது இடையூறு செய்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாக்கு பதிவின்போது ஒருவரை பிடித்து தாக்குதல் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையினர், கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜெயக்குமார் இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை முறைகளை மீறி சாலை மறியல் செய்ததாக 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெயக்குமார் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜெயக்குமார் தொடர்ந்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அவரது மனுவை நீதிபதி தயாளன் விசாரித்தார்.
காலை 10.30க்கு விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் காலை 11.30 மணிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் இரண்டாவது வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 9-ந் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.