கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா காலமானார்
கரிசல் காட்டு இலக்கியத்தின் முன்னத்தி ஏராக விளங்கிய தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர் கி.ரா என்னும் கி.ராஜநாராயணன் காலமானார். அவருக்கு வயது 99.
கரிசல் காட்டு மண்ணை, மனிதர்களை, அவர்தம் வாழ்வியலை தன் எழுத்துக்கள் மூலம் இலக்கியத்தில் பதிவு செய்த முன்னோடி, தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ரா என்னும் கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அவருக்கு இறுதி சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சாகித்திய அகாடமி, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற கி.ரா, கரிசல் காட்டு இலக்கியத்தின் தந்தை என கொண்டாடப்பட்டவர். நாட்டுப்புற மக்களின் இயல்பான வழக்கு மொழியை இலக்கியத்தில் புகுத்தி, சாமானிய மனிதர்களின் வாழ்வியலை தன் எழுத்துகள் மூலம் மாபெரும் சபைக்கு கொண்டு சேர்த்தவர்.
கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் 1922 செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்த கி.ரா, விவசாயியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர். ”மழைக்கு பள்ளி பக்கம் ஒதுங்கினாலும் வகுப்பறையை பார்க்காமல் மழையையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்” என்று சொன்ன கி.ரா-வைதான் புதுச்சேரி பல்கலைக்கழகம் சிறப்பு பேராசிரியராக ஆக்கி தன்னகத்தே அழைத்துக்கொண்டது.
கரிசல் காட்டை தன் எழுத்துகள் மூலம் தமிழில் கி.ரா பதிவு செய்த பிறகே கரிசல் காட்டு எழுத்தாளர்கள் என்ற ஒரு மரபே உருவாகத் தொடங்கியது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் கோணங்கி, பூமணி, சோ.தர்மன், மேலாண்மை பொன்னுசாமி, தேவதச்சன், தமிழ்ச்செல்வன் போன்ற ஏராளமான எழுத்தாளர்கள் கரிசல் காட்டு இலக்கியத்தை கி.ராவை தொடர்ந்து பதிவு செய்யத் தொடங்கினர். கி.ரா-வையே தங்களது ஆசானாக ஆக்கிக்கொண்ட எழுத்தாளர்கள் இவர்கள். நாட்டார் கதைகளைத் தேடித்தேடி எடுத்து, நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் என்ற தலைப்பில் தொகுத்து இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்ததோடு, அவர் எழுதிய கரிசல் வட்டார வழக்கு அகராதி தமிழ் மொழிக்கான கொடை.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மட்டுமின்றி கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் உள்ளிட்ட நாவல்களையும், கிடை, பிஞ்சுகள் ஆகிய குறுநாவல்களையும் எழுதியவர். தன் சமகால எழுத்தாளர்கள் மட்டுமின்றி தனக்கு பின்னர் எழுதத் தொடங்கிய பல்வேறு எழுத்தாளர்களுடன் நட்பு பாரட்டி, அன்பு செலுத்தி, அவர்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி, எழுத ஊக்கப்படுத்தியவர்.
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழில் ஞானபீட விருது யாருக்கும் இதுவரை அளிக்கப்படவில்லை. அதனை கி.ரா என்ற ஆகச்சிறந்த ஆளுமைக்கு வழங்கப்பட வேண்டும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற அவரது 95வது பிறந்தநாள் விழாவிலும், 98வது பிறந்தநாள் விழாவிலும் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றாக சேர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் கடைசிவரை அந்த கோரிக்கை மத்திய அரசின் காதுகளுக்கு எட்டாமலேயே போய்விட்டது.
இளமை முதலே எலும்புறுக்கி நோயால் அவதிப்பட்டாலும், சர்க்கரை நோய் தாக்கியிருந்தாலும் தன் எழுத்தை எந்த இடத்திலும் விடாமல் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருந்தார் கி.ரா. 99 வயது நிரம்பியிருந்த அவர் 100-வது வயதை இந்த செப்டம்பரில் எட்டும்போது மிகப்பெரிய விழா எடுக்க வேண்டுமென்று தமிழ் இலக்கிய உலகம் கனவுகண்டுக்கொண்டிருந்தது. அந்த கனவுகளை நினைவாக்காமலேயே தனது 99வது வயதில் கரிசல் காட்டில் இழுத்த தனது முதல் மூச்சை புதுச்சேரியில் இறுதியாக வெளியில் விட்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டார் கி.ரா.
பெருவாழ்வு வாழ்ந்த கி.ரா என்ற ஆளுமையின் மறைவு தமிழ் எழுத்துலகிற்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு !