Nurses Met EPS: சேலம்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசு அறிவித்த செவிலியர் பணி நீக்க ஆணையை ரத்து செய்ய சட்டமன்றத்தில் குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசுவதாக உறுதியளித்தார்.
சேலத்தில் போராட்டம் நடத்தி வரும் செவிலியர்களின் பிரதிநிதிகள் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது திமுக அரசு அறிவித்த செவிலியர் பணி நீக்க ஆணையை ரத்து செய்ய சட்டமன்றத்தில் குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசுவதாக உறுதியளித்தார்.
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாகவும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்களுக்கு, ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பணி நீட்டிப்பு செய்யும் ஆணை வழங்கப்பட்டது.
இந்நிலையில், எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,472 செவிலியர்களுக்கு நேற்று முன்தினம் பணி நீட்டிப்பு ஒப்பந்தம் முடிந்த நிலையில், மீண்டும் நீட்டிப்பு செய்யப்படவில்லை. அவர்களை பணியில் இருந்து விடுவிப்பதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை கலையாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200 மேற்பட்ட செவிலியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொளுத்தும் வெயிலிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
செவிலியர்கள் போராட்டத்திற்கு பாமக, கம்யூனிஸ்ட், பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல கட்சியினர் மற்றும் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து செவிலியர்கள் கூறுகையில், ”கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்கான சேவையில் ஈடுபட்டோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் நேரடியாக பணி வழங்கவில்லை. மருத்துவப் தேர்வாணையம் தேர்வு எழுதி 60% சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டோம். ஆறு மாத காலம் பணிக்கு நியமிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டும். திடீரென கடந்த 31 ஆம் தேதி உங்களுக்கான தற்காலிக பணி நிறைவு பெற்றுவிட்டது நாளை முதல் நீங்கள் யாரும் பணிக்கு வர வேண்டாம் என கூறினர். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும். அமைச்சர் பலமுறை உறுதியளித்து விட்டார். ஆனால் எங்களுக்கு முறையான அரசாணை வெளியிட்டு பணியானையும் வழங்கப்பட வேண்டும்” என்று கூறினர்.
இதற்கிடையே செவிலியர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு வெட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் செல்போனில் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்ததால் அனைவரையும் காவல்துறையினர் இரண்டாவது நாளாக கைது செய்தனர்.