Aavin milk Distribution: மழையால் முடங்கிய ஆவின் பால் விநியோகம்; குழந்தைகள், கர்ப்பிணிகள் அவதி- சீராகும் என அமைச்சர் உறுதி!
ஆவின் பால் விநியோகம் சீர் செய்யப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முழுவதும் கொட்டித் தீர்த்த கன மழையால், ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களின் பால் விநியோகம் இன்று சென்னை முழுவதும் முடங்கியது.
இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி எந்த நிறுவனத்தின் பாலும்பால் முகவர்களுக்கு வந்து சேரவில்லை. இதற்குப் பிறகு சோழிங்கநல்லூர், மாதவரம் பகுதிகளில் உள்ள பால் பண்ணைகள் மூலம் பால் விநியோகம் தொடங்கியது.
அம்பத்தூரில் ஆவின் பால் பண்ணையிலும் புகுந்த வெள்ளம்
கன மழையால் தலைநகர் சென்னையே வெள்ளத்தில் மிதக்கிறது. அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் சென்னை மக்களுக்குத் தேவைப்படும் 5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதனால், பிற மாவட்டங்களில் இருந்து பால் பெறப்பட்டு, விநியோகம் செய்யப்படுவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிராக்டரில் சென்று, அமைச்சர் ஆய்வு
இதற்கிடையே ஆவின் பால் விநியோகம் சீர் செய்யப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நீரால் சூழ்ந்துள்ள அம்பத்தூர் பால் பண்ணைக்கு டிராக்டரில் சென்று, அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து தனியார் செய்தித் தொலைக்காட்சியிடம் பேசிய அவர், ''பால் விநியோகத்தில் பாதிப்புகள் உள்ளன. இடுப்பளவு நீர் தேங்கி உள்ளதால், லாரியால் பாலை எடுத்துச்செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களே எடுத்துச் செல்ல முடியாததால், இந்த சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் கண்டிப்பாக பால் விநியோகம் சீர் செய்யப்படும். சென்னை பண்ணையை மட்டுமே நம்பி பால் விநியோகத்தை மேற்கொள்ள முடியாது. அதனால் வெளியூர்களில் இருந்தும் ஆவின் பால் பெறப்பட்டு வருகிறது'' என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.