Yaas cyclone: வருகிறது ‘யாஸ்’ புயல்.. 22 சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே!
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாக உள்ள ‘யாஸ்’ புயல் காரணமாக 22 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அட்டவணை வெளியிட்டுள்ளது. அதில், நாகர்கோவில் - ஷாலிமார் சிறப்பு ரயில் மே 23 வரை, ஷாலிமார் - நாகர்கோவில் சிறப்பு ரயில் மே 26 வரை, ஹவுரா - கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே 24 வரை, ஹவுரா - சென்னை சிறப்பு ரயில் மே 24 முதல் மே 26 வரை, சென்னை - ஹவுரா சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை, ஷாலிமார் - திருவனந்தபுரம் மே 25 வரை, எர்ணாகுளம் - பாட்னா மே 24 முதல் மே 25 வரை, பாட்னா- எர்ணாகுளம் மே 27 முதல் மே 28 வரை, திருச்சி - ஹவுரா மே 25 வரை, ஹவுரா - திருச்சி மே 27 வரை உள்ளிட்ட 22 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மையம் நாளை மறுநாள் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடையில் தவித்த வந்த சென்னை மக்களுக்கு இந்த மழை சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது. எனினும் இன்று உடன் இந்த மழை குறைந்து மீண்டும் வெப்பம் அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் போது சென்னையில் படி படியாக மழை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலுக்கு ஓமன் நாடு கொடுத்த 'யாஸ்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி இந்தப் புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மாநில கடற்பகுதிகளில் கரையை கடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒடிசாவில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. புயலுக்கு முன்பாக எடுக்கப்படும் ஆயத்த பணிகளை ஒடிசா அரசு தீவிர படுத்தியுள்ளது. அதன் ஒருபகுதியாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணிகளை ஒடிசா அரசு செய்து வருகிறது.
இந்தாண்டு டவ்தே புயலுக்கு பிறகு வரும் இரண்டாவது புயல் யாஸ் ஆகும். மேலும் வங்கக்கடலில் உருவாகும் முதல் புயல் இதுவாகும். அடுத்த சில நாட்களுக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பகுதிகள் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் மீன்வர்கள் வரும் 26 தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஒடிசா மட்டுமல்லாமல் மேற்கு வங்கம், அதே போல ஆந்திராவை ஒட்டிய எல்லை பகுதியில் உள்ள கடலோர பகுதிகளின் மீனவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.