கொடைக்கானலில் ரகசியமாக நடக்கும் புலி வேட்டை
கொடைக்கானலில் ரகசியமாக நடந்து வந்த புலி வேட்டை சம்பவம், அவற்றின் பற்களை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அவ்வப்போது வனம் சார்ந்த சர்சைகள் எழுவது வழக்கம். அந்த வகையில் தற்போது புலிவேட்டை பூதாகரமாக வெடித்துள்ளது. கொடைக்கானல் அண்ணாசலை பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் வடை விற்பதைப் போல இருவர் புலி பற்கள் விற்று வந்துள்ளனர். அதை கண்டு அதிர்ந்து போன சிலர், அது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து பார்த்த போது காத்திருந்தது பேரதிர்ச்சி.
கொடைக்கானல் அப்சர்வேட்டரியை சேர்ந்த 37 வயதான வேல்முருகன், பெரியகுளம் வடுகப்பட்டியை சேர்ந்த 50 வயதான தாமோதரன் ஆகியோர் புலிகளின் பற்கள் மற்றும் நகங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து தலா நான்கு பற்கள் மற்றும் நகங்கள் கைப்பற்றப்பட்டு, 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை நடந்த விசாரணையில் அவை வேட்டையாடப்பட்ட புலிகளின் பற்கள் மற்றும் நகங்கள் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரு பெரிய நெட்வொர்க் இதின் பின்னணியில் இருந்து செயல்படுவதாகவும், அதற்கான பெருந்தொகை கைமாற்றப்படுவதும் தெரியவந்துள்ளது.
கொடைக்கானலில் புலிகள் அரிதாக காணப்படும் சூழலில் அதன் பின்னணியில் இது போன்ற வேட்டையாளர்கள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தேசிய விலங்கான புலிகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வரும் சூழலில், கொடைக்கானலில் பற்கள், நகங்கள், தோல் போன்றவற்றிக்காக புலிகள் வேட்டையாடப்படுவது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.