விரைவில் சட்டமாகிறது நரிக்குறவர், குருவிக்கார பிரிவினர்களின் கோரிக்கை..மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் மசோதாவிற்கு, மாநிலங்களவையிலும் ஒப்புதல் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள குருவிக்காரர் சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் சமுதாயத்துடன் இணைக்க வேண்டும் என தொடர்ந்து மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் குளிர் காலக் கூட்டத்தொடரில், மத்திய பழங்குடியின விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா, தமிழ்நட்டில் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள குருவிக்காரர் மற்றும் நரிக்குறவ உள்ளிட்ட சமூக மக்களை பழங்குடியின சமுதாயத்தில் இணைக்கும் மசோதாவை கடந்த வாரம் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். அப்போது பல்வேறு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைதொடர்ந்து அந்த மசோதா ஒப்புதலுக்காக, மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் நிறைவேற்றம்:
இந்நிலையில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் உள்ளிட்ட சமூக மக்களை, பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் மசோதா மாநிலங்களைவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பப்பட உள்ளது.
எப்போது அமலுக்கு வரும்?:
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்ட இந்த மசோதாவிற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின்னர், அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் அமலுக்கு வரும். இந்த சட்டம் மேற்குறிப்பிட்ட நடைமுறைகள் முடித்து நடைமுறைக்கு வர, 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் கடிதம்:
தமிழ்நாட்டில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதலமைச்சருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி, முதலமைச்சர் ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அமைச்சரவை ஒப்புதல்:
அதைதொடர்ந்து, மோடி தலைமையில் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமுதாயத்தினரை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்மூலம், பழங்குடியினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இனி நரிக்குறவர், குருவிக்காரர், ஹட்டி மற்றும் பிரிஜியா ஆகிய சமூகத்தினருக்கும் கிடைக்க உள்ளது.