(Source: ECI/ABP News/ABP Majha)
ஊதிய உயர்வு வேண்டும்: தூத்துக்குடியில் நாளை முதல் துறைமுகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் அலட்சிய போக்கினால் ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 32 மாதங்கள் கடந்தும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஊதிய உயர்வு கோரி துறைமுகத்தொழிலாளர்கள் நாடு முழுவதும் நாளை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் இதனால் துறைமுகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிஐடியு மாநில செயலாளர் ரசல், ஐஎன்டி யூசி அமைப்பு செயலாளர் கதிர்வேல், தூத்துக்குடி துறைமுக ஆணைய உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஹச்.எம்.எஸ் தலைவர் சுரேஷ், துறைமுக அண்ணா தொழிற்சங்க தலைவர் சண்முக சுந்தரி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் தூத்துக்குடியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கூறிய அவர்கள், நாடும் முழுவதும் உள்ள பெரிய துறைமுகங்களில் பணியாற்றும் 3வது மற்றும் 4 வது நிலை தொழிலாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். கடந்த 1-1-2022 முதல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏழு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக சுமுகத் தீர்வு ஏற்படவில்லை. மத்திய கப்பல் துறை அமைச்சகம் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது.
மேலும் வருமானம் ஈட்டக்கூடிய துறைமுகங்கள் துறைமுகங்கள் மற்றும் துறைமுக கப்பல் தளங்களை மத்திய அரசு தொடர்ந்து தனியார் மையமாக்கி வருகிறது. இதனால் பெரிய துறைமுகங்களில் பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் ஏற்பட்டு உள்ளன. துறைமுகங்களில் 3.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 20,000 நிரந்தர தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றிய வருகின்றனர்.இந்த நிலையில் 3-வது மற்றும் 4-ம் நிலையில் பணியில் நிரந்தர தொழிலாளர்களை நியமிக்காமல் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிக்க மத்திய கப்பல் துறை அமைச்சகம் கடந்த நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக வேலைக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே தொழிலாளர் விரோதப் போக்கினை கைவிடக் கோரியும் துறைமுக ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பெரும் துறைமுகங்களில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். துறைமுகங்களில் செயல்படும் 5 சம்மேளனங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கின்றன. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் 8 தொழிற்சங்களை சேர்ந்த நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், தனியார் கப்பல் தள பணியாளர்கள் பங்கேற்கின்றனர். இதனால் துறைமுகப் பணிகள் 100% முடங்கும் நிலை உள்ளது. எனவே மத்திய அமைச்சகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்