வேளச்சேரி மறுவாக்குப்பதிவு: கடந்த முறையை விட 34 வாக்குகள் குறைவாக பதிவு
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடியில் கடந்த முறையை காட்டிலும் 34 வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேளச்சேரியில் இருவர் வாக்கு இயந்திரங்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதை பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதலில் அவர்கள் தேர்தல் பணியாளர்கள் என்றும், அவர்கள் கொண்டு சென்றது வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தாத வாக்கு இயந்திரங்கள் என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ கூறினார்.
விசாரணையில் அந்த வாக்குச்சாவடிகள் வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட சீதாராம் நகரில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 92வது வாக்குச்சாவடி மையத்தில் ஒரு மணிநேரம் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அந்த இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு 17-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி, இன்று காலை 7 மணிக்கு வேளச்சேரி, சீதாராம் நகரில் டி.ஏ.வி. பள்ளியில் 92வது வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடியை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 548 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியான நபர்களாக இருந்தனர். இவர்கள் அனைவரும் ஆண் வாக்காளர்கள் ஆவர். மறு வாக்களித்த வாக்காளர்களுக்கு இடது கையில் உள்ள நடுவிரலில் மை வைக்கப்பட்டது.
காலை முதல் வாக்குப்பதிவு மந்த நிலையிலே காணப்பட்டது. மாலை 4 மணி நிலவரப்படி, 175 நபர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். இறுதியாக, வாக்குப்பதிவு 7 மணிக்கு நிறைவு பெற்றபோது 186 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. 548 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க இருந்த இந்த வாக்குச்சாவடியில், மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
கடந்த 6-ந் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 220 வாக்குகள் பதிவாகியிருந்தது. தற்போது நடைபெற்ற வாக்குப்பதிவில் 34 வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மறுவாக்குப்பதிவில் வாக்களிக்க பெரும்பாலான வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பிறகு, வாக்கு இயந்திரம் உரிய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஹசன் மவுலானா, அ.தி.மு.க. சார்பில் அசோக் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.