CM Stalin on DMK: ‛அடக்கப்பட்ட யானை... காட்டு யானை... கும்கி யானை...’ முதல்வர் பேச்சை கிண்டலடித்து வானதி ட்விட்!
திமுக அடக்க முடியாத யானை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய நிலையில், யானை தொடர்பாக வானதி சீனிவாசன் கிண்டல் ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்க முடியாத யானை எனக் கூறியதற்கு, அடக்கப்பட்ட யானை என்னவெல்லாம் செய்யும்? என கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார்.
இதுதொடர்பான அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அடக்கப்பட்ட யானை என்னவெல்லாம் செய்யும்? காட்டில் சுற்றும் யானை என்ன செய்யும்? "கும்கி யானை " என்ன செய்யும்? ????...!!!’ எனப் பதிவிட்டுள்ளார்.
அடக்கப்பட்ட யானை என்னவெல்லாம் செய்யும்?
— Vanathi Srinivasan (@VanathiBJP) June 24, 2021
காட்டில் சுற்றும் யானை என்ன செய்யும்?
"கும்கி யானை " என்ன செய்யும்?
????...!!!
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் இன்று நடைபெற்றது. இன்றைய விவாதத்தின்போது யானையும் இல்லை மணியோசையும் இல்லை என ஆளுநர் உரையை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துப் பேசினார். அவரது பேச்சுக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி. அப்படித்தான் நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம். அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை.
யானைக்கு 4 கால்கள் தான் பலம். அதுபோல திமுகவுக்கு சமூக நீதி, மொழிபற்று, சுய மரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம். இந்த 4 கொள்கைகளை அடிப்படையாக வைத்தே திமுக செயல்படும்'' என்று பேசினார்.
முன்னதாக, ஒன்றிய அரசு என அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய வானதி சீனிவாசன், “"இந்தியா என்கிற பாரத நாட்டின் நிர்வாக வசதிக்காகவே மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது போல, இந்திய அரசு நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் இரண்டு அல்லது மேலும் பல மாநிலங்களாகப் பிரிக்க முடியும். ஆனால், இந்தியா என்ற பாரத நாட்டை யாராலும் பிரிக்க முடியாது. இந்தியாவில் இருந்து பிரிகிறோம் என்று மாநிலங்கள் கூற முடியாது. அப்படிக் கூறினால் அது பிரிவினைவாதம். தேசத் துரோகம். எனவே, முதலமைச்சர் கூறியது போல கூட்டாட்சி தத்துவத்திற்காக ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினால் பிரச்சினையில்லை. ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதால் இந்திய அரசின் அதிகாரங்கள் குறையப்போவதில்லை. இவ்வளவு விளக்கம் அளித்த முதலமைச்சர், ‘மத்திய அரசு' என்றால் என்ன, 'ஒன்றிய அரசு' என்றால் என்ன, இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதற்கும் விளக்கம் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல்வரின் யானை உவமைக்கு பதிலளிக்கும் வகையில், தனது டுவிட்டர் பக்கத்தில் வானதி இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் கூறியிருக்கும் கருத்து, எதை குறிக்கிறது என்கிற குழப்பம் ஒரு பக்கம் நிலவி வருகிறது. அடக்கப்பட்ட யானை என்ன செய்யும் என கேள்வி எழுப்பியுள்ளார். அது என்ன செய்யும் என அவர் விளக்கவில்லை. முதல்வர் குறிப்பிட்டது அதிமுகவை. அப்படியானால், அதிமுக என்ன செய்யும் என்பதை வானதி குறிப்பிடவில்லை. காற்றில் சுற்றும் யானை என்ன செய்யும் என கேட்டுள்ளார். அடக்க முடியாதது காட்டு யானை என அவர் கூறுவது புரிகிறது. ஒருவேளை அவருடைய கருத்துப்படி, காட்டு யானைகள் விவசாயத்தை அழிக்கும், மக்கள் கண்டால் விரட்டும். அதை மனதில் வைத்து குறிப்பிடுகிறாரா என்பது தெரியவில்லை. கும்கி யானை செய்யும் என கேட்டுள்ளார். கும்கி யானையின் ஒரே பணி, மதம் பிடித்த யானையை விரட்டுவது. அல்லது காட்டு யானையை விரட்டுவது. அது தெளிவாக புரிகிறது. இருப்பினும் யார் கும்கி யானை என்பது தெரியவில்லை. இந்த கேள்விகளை தான் அவரது பதில் பலரும் கேட்டு வருகின்றனர்.