உண்மையான தொண்டர் அதிமுகவிலிருந்து விலகமாட்டார்- முன்னாள் அமைச்சர் தங்கமணி
அதிமுகவில் இருந்து ஒரு சிலர் சொந்த ஆதாயத்திற்காகவும் நிர்பந்தத்தின் காரணமாகவும் மாற்றுக் கட்சிக்கு செல்கின்றனர் - தங்கமணி
ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றிருந்தவருமான சோழவந்தான் தொகுதியின் முன்னாள் ஏம்.எல்.ஏ மாணிக்கம் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அதிமுகவிலிருந்து பாஜகவிலிருந்து இணைபவர்கள் அதிகரித்துள்ளதால் அக்கட்சியின் தலைமை திணறிவருகிறது. கட்சிக்குள் ஒற்றுமை இல்லாததும், இரட்டை தலைமையும்தான் இதற்கு காரணம் என கட்சிக்குள் சிலர் கூறுகின்றனர்.
பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம், ஜெயலலிதாவின் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற முக்கிய காரணமாக இருந்தவர் பாரத பிரதமர் மோடி. அவர் ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த நபர் மோடி. அதனால்தான் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக கட்சியுடன் இணைந்தேன் என்றார்.
மேலும் ஓபிஎஸ்-இபிஎஸ் ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்க்க வேண்டும். இருவரும் சேர்ந்து இருக்க வேண்டும். இடையில் தலையிடுபவர்கள் பேச்சை கேட்காமல் இணைந்து செயல்பட வேண்டும் என ஏபிபி நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியிலும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவில் இருந்து ஒரு சிலர் சொந்த ஆதாயத்திற்காகவும் நிர்பந்தத்தின் காரணமாகவும் மாற்றுக் கட்சிக்கு செல்கின்றனர். ஆனால், அதிமுகவின் உண்மை விசுவாசியான ஒரு தொண்டன்கூட இந்தக் கட்சியில் இருந்து விலகுவது கிடையாது. தொண்டர்கள் அனைவருமே அதிமுகவில் உள்ளனர்” என்று பேசினார்.
முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனு வாங்கும் பணி இன்று தொடங்கியது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இருப்பவர்களுக்கான விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில், கலந்துகொண்டு தங்கமணி விருப்ப மனுக்களை வழங்கினார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். ஏற்கனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பணம் கட்டியவர்கள் மீண்டும் கட்ட தேவையில்லை. அதற்கான ரசீது வைத்து இருந்தாலே போதுமானது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ABP Nadu Exclusive: ‛அவர்கள் பேச்சை இபிஎஸ்-ஓபிஎஸ் கேட்கக் கூடாது...’ பாஜவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் பேட்டி!