ABP Nadu Exclusive: ‛அவர்கள் பேச்சை இபிஎஸ்-ஓபிஎஸ் கேட்கக் கூடாது...’ பாஜவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் பேட்டி!
‛‛அவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் அவ்வளவு தான். இன்று அதை சொல்ல தகுதியில்லாதவன் நான். அவ்வளவு தான்!’’ -மாணிக்கம்
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.,யின் தர்ம யுத்தத்தின் முதன்மையாக அவருடன் இருந்தவரும், அதிமுகவின் வழிகாட்டு குழுவில் ஒருவரும், மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அதே தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த மாணிக்கம், இன்று காலை திருப்பூரில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று, தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
ஓபிஎஸ்.,க்கு நெருக்கமாக இருந்த மாணிக்கம், மாற்று கட்சிக்கு சென்றது ,இன்று சென்னையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிரொலித்தது. முக்கிய பொறுப்பான வழிகாட்டு குழுவில் இருந்த ஒருவர், மாற்றுக் கட்சிக்கு சென்றிக்கிறார்... அவர் செல்வதை யாரும் தடுக்கவில்லை என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் இன்று வெளியானது. உண்மையில் இது ஓபிஎஸ்-க்கு நெருக்கடியாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் ஏன் இந்த முடிவு... என்பது குறித்து மாணிக்கத்திடம் ஏபிபி நாடு சார்பாக பிரத்யேக பேட்டி எடுக்கப்பட்டது. இதோ இனி அவருடன்...
கேள்வி: ஏன் இந்த திடீர் முடிவு?
மாணிக்கம்: மோடி தமிழ்நாட்டுக்கு நிறைய நன்மை செய்கிறார். தமிழ் மக்கள் மீது பாசமாக உள்ளார். திருக்குறளுக்கு நிறைய செய்கிறார். பாஜக நன்கு வளர்ந்து வருகிறது. திமுகவை கடுமையாக எதிர்க்கிறார்கள். ஜெயலலிதா காலத்தில் எதிர்த்தது போல எதிர்க்கிறார்கள். அந்த அபிப்பிராயத்தில் சென்றேன்.
கேள்வி: அதிமுகவில் ஏதேனும் மனக்கசப்பா... ஏன் இந்த முடிவு?
மாணிக்கம்: அதிமுகவில் எனக்கு நல்ல அங்கீகாரம் தான் கொடுத்தார்கள். ஓபிஎஸ்-இபிஎஸ் மரியாதையாக தான் என்னை நடத்தினார்கள்.
கேள்வி: ஓபிஎஸ்-க்கு நெருக்கமான நீங்கள்... அவரிடம் இது குறித்து சொன்னீர்களா...?
மாணிக்கம்: எனது முடிவு பற்றி ஓபிஎஸ்-க்கு தெரியாது. நான் சொல்லவும் இல்லை. என்னுடைய தனிப்பட்ட பிரியத்தில் சென்றேன். அவர்கள் மீது நான் எந்த குறையும் சொல்லமாட்டேன். பாஜக மீதான பிடித்தத்தில் தான் நான் சென்றேன்.
கேள்வி: திமுக அரசு எதையாவது தோண்டி எடுக்கும் என்கிற அச்சத்தில் , பாதுகாப்பு கருதி கட்சி மாறினீர்களா?
மாணிக்கம்: நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் நேர்மையான எம்.எல்.ஏ., அதனால் எனக்கு பயமில்லை. திமுக தான் கொள்ளை புறமாக ஆட்சியை பிடித்துள்ளது. என்னை அவர்கள் அச்சுறுத்த நினைத்தால் அவர்களை நான் சட்டப்படி சந்திப்பேன்.
கேள்வி: பாஜகவில் பெரிய பொறுப்பு ஏதாவது தருவதாக கூறினார்களா?
மாணிக்கம்: நான் உறுப்பினராக தான் பாஜகவில் இணைந்துள்ளேன். அவர்கள் கொடுப்பதை ஏற்றுக்கொள்வேன்.
கேள்வி: ஒரே நேரத்தில் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஜகவில் இணைந்துள்ளது சந்தேகமாக உள்ளதே?
மாணிக்கம்: நாங்கள் விரும்பி தான் போனோம். அவர்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. மோடி மீதான நம்பிக்கையில் தான் போயுள்ளேன்.
கேள்வி:அதிமுகவில் இருந்து மேலும் பலர் வருவதாக கூறுகிறார்களே...?
மாணிக்கம்: அதைப் பற்றி எனக்கு தெரியாது. அதைப் பற்றி சிந்திக்கவும் இல்லை. நாங்கள் பேசவும்இல்லை.
கேள்வி: திமுகவை பாஜக எதிர்க்கிறது என்கிறீர்கள்... அதிமுக எதிர்க்கவில்லையா?
மாணிக்கம்: அதிமுகவிலும் எதிர்க்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் எதிர்க்கவில்லை என்று சொல்லமாட்டேன். அவர்களும் களப்பணி செய்கிறா்கள். அதிமுகவும் பாஜகவின் கூட்டணி கட்சி தானே. இதுவரை இருந்த பிரதமர் யாரும் தமிழ்நாட்டிற்கு செய்யாததை மோடி செய்கிறார். என்னுடைய தொகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில், ஜல்லிக்கட்டு உரிமையை பெற்றுத்தர காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி தான். மக்களிடம் நன்மதிப்பை பெற அது தான் காரணமாக இருந்தது. முல்லைப்பெரியாறு பாசனம் பெறும் 60 ஆயிரம் ஏக்கரில், 46 ஆயிரம் ஏக்கர் எனது தொகுதியில் உள்ளது. முல்லைப் பெரியாறு உரிமையை பெற்றுத்தந்தது மோடி தான். ஜெயலலிதாவும் பாஜக உடன் இணக்கமாக தான் இருந்தார். அதிமுக மீது எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. பாஜகவை விரும்பி சென்றுள்ளேன்.
கேள்வி:உங்கள் மீது நம்பிக்கை வைத்த ஓபிஎஸ்-க்கு இது நெருக்கடியை தராதா?
மாணிக்கம்: இதனால் அவருக்கு நெருக்கடி இல்லை. இது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு. கட்சியின் தலைவர் என்கிற முறையில் அவர் வழிநடத்துகிறார். அவர் மரியாதைக்குரியவர், என்றும் அவரை வணங்குவேன்.
கேள்வி:முறையாக நீங்கள் செல்பவராக இருந்தால், முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு தானே சென்றிருக்க வேண்டும்?
மாணிக்கம்: கண்டிப்பாக கடிதம் அனுப்புவேன். இன்றே ராஜினாமா கடிதம் அனுப்புவேன். முறையாக செய்ய வேண்டியதை செய்வேன். நான் எந்த பதவியையும் வைத்து அங்கு தாவவில்லை. எனக்கு அங்கீகாரம் தந்த அவர்களுக்கு நன்றி சொல்லி கடிதம் அனுப்புவேன்.
கேள்வி: ஓபிஎஸ் தான் உங்களை பாஜகவிற்கு அனுப்பி வைத்ததாக ஒரு தரப்பு சமூகவலைதளத்தில் எழுதுகிறார்களே?
மாணிக்கம்: அது பொய். அவருக்கு அதுபற்றி தெரியாது. இஸ்டத்திற்கு பேசுவார்கள். அதற்கு நான் பதிலளிக்க முடியாது. இது என்னோட தனிப்பட்ட முடிவு. அதற்கு நான் தகுதியானவன். இப்போது நான் பாஜக தலைமையை விரும்புகிறேன். திமுக அரசால் எந்த நல்லதும் செய்ய முடியவில்லை. கட்சி தலைவர் என்கிற முறையில் ஓபிஎஸ் உடன் இருந்தேன். அவர் பதவி கொடுத்தார். தலைமையை நான் குறை சொல்ல தயாராக இல்லை.
கேள்வி: சரி... இப்போது நீங்க கட்சியில் இல்லை... அதிமுகவிற்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்...?
மாணிக்கம்: ஓபிஎஸ்-இபிஎஸ் ஒற்றுமையா இருந்து கட்சியை வளர்க்கனும். இருவரும் சேர்ந்து இருக்கணும். இடையில் தலையிடுபவர்கள் பேச்சை கேட்காமல் இணைந்து செயல்பட வேண்டும்.
கேள்வி: அப்படி யார்... தலையிடுகிறார்கள்...?
மாணிக்கம்: அது எனக்கு தெரியாது... அவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் அவ்வளவு தான். இன்று அதை சொல்ல தகுதியில்லாதவன் நான். அவ்வளவு தான்!
இவ்வாறு மாணிக்கம், நம்மிடம் பேசினார்.