Edappadi Palanisamy: ‛பாஜகவில் இணையமாட்டார் ராஜேந்திர பாலாஜி...’ -அடித்து சொல்லும் இபிஎஸ்!
கூட்டணி கட்சித் தலைவரை பார்த்தால் அவர் அந்த கட்சியில் இணையப்போகிறார் என்று அர்த்தமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு நிதிநிலை சீரழிந்ததாக கூறப்படுவது தவறானது என்றும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணையமாட்டார் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. 120 பக்கங்களைக் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் வெளியிடுகிறார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு நிதிநிலை சீரழிந்ததாக கூறப்படுவது தவறானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன்கள் தற்போது மூலதனங்களாக உள்ளதாகவும், அந்த கடன்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவு கூறினார்.
மேலும், இபிஎஸ் தொடர்ந்து அளித்த பேட்டியில், “2011இல் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும்போதும் கடன்சுமை இருந்தது. அதிமுக ஆட்சியில் இருந்த கடன்கள் திமுக ஆட்சியிலும் இருந்தவைதான். மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்டவை விலை அதிகரித்த போதும் அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயரவில்லை. 100 நாட்களில் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை” என்றார்.
நீட் தேர்வை ரத்து செய்ய திமுக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பிய பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணையப் போவதாக கூறுவது தவறான தகவல் என்றும், இதுதொடர்பாக அவரிடம் பேசினேன், அதிமுகவில்தான் அவர் தொடர்ந்து இருப்பார் எனவும் கூறினார். கூட்டணி கட்சித் தலைவரை பார்த்தால் அவர் அந்த கட்சியில் இணையப்போகிறார் என்று அர்த்தமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மூத்தத் தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, " அரசியல் கட்சியில் யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது. நடந்தால் மட்டும் தான் பதிலளிக்க முடியும். பாரத பிரதமரின் சித்தாந்தங்களையும், தமிழக அரசியலில் நல்ல மாற்றம் கொண்டு வரவேண்டும் என எண்ணுவார்கள் யாராக இருந்தாலும் பாஜகவில் இணையலாம். பாஜகவில் இணையும் தலைவர்கள் அனைவரும் தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் முன்னுரிமை கொடுக்கின்றனர்.
அரசியலில் ஒரே இடத்தில் பணி செய்யவேண்டும் என்ற அவசியம் யாருக்கும் கிடையாது. கட்சிக்குள் தங்களுக்கு பிரச்சனைகள் வரும்போதும், மக்களுக்கு பணி செய்யமுடியாத சூழல் வரும்போதும் பாஜகவில் இணைகின்றனர். அவர்களுக்கு, வாய்ப்பு அளிக்க தமிழக பாஜக எப்போதும் தயாராக இருக்கிறது" என்று தெரிவித்தார்.