இலங்கை பதட்டம்! ரணில் வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்! அடித்து நொறுக்கப்பட்ட வீடு!
போராட்டம் ஓயாமல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே, ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
இலங்கையில் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரைகளை ஏற்கிறேன். இதற்கு வசதியாக, பிரதமர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், போராட்டம் ஓயாமல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே, ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமும் காவல்துறையினரும் திணறி வருகின்றனர்.
Protesters have broken into the private residence of Prime Minister Ranil Wickremesinghe and have set it on fire - PM's office pic.twitter.com/yXGFvHbMKt
— Azzam Ameen (@AzzamAmeen) July 9, 2022
இலங்கை சபாநாயகர் வீட்டில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இணையம் வழியாக கலந்து கொண்டனர். அதில், அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்ட ரணில் பிரதமர் பதவியிலிருந்து விலக மறுப்பு தெரிவித்துள்ளதாக எம்பி ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், பெரும்பான்மை தலைவர்களின் கோரிக்கையின்படி பதவி விலக பிரதமர் மற்றும் அதிபருக்கு சபாநாயகர் கடிதம் எழுத முடிவு செய்துள்ளார். முன்னதாக, அரசியலமைப்பின்படி தற்காலிக அதிபராக சபாநாயகரை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து கட்சி அரசை அமைக்க தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு மதிப்பளிப்பதாக அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்திருந்தார். அதிபரின் முடிவு குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இச்சூழலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று நடைபெறும் ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று மாலை 04.00 மணிக்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல், நாட்டில் நிலவி வரும் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக அவசர கூட்டத்திற்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
அதிபரின் செயலகம் மற்றும் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையை இன்று முற்றுகையிட்ட பொது மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து, சிறப்பு கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உளவுத்துறையிலிருந்து தகவல்கள் கிடைத்ததையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகையிலிருந்து ராணுவ தலைமையகத்திற்கு நேற்றிரவு தப்பி சென்றதாக செய்தி வெளியாகியுள்ளது. சனிக்கிழமை போராட்டத்தை சட்ட விரோதமாக அறிவிக்க கோரிய காவல்துறையின் கோரிக்கையை நீதிபதிகள் மறுத்துள்ளனர்.