(Source: ECI/ABP News/ABP Majha)
புதுச்சேரியில் முடிவுக்கு வந்தது இழுபறி; பாஜக நிபந்தனைகளை ஏற்றார் ரங்கசாமி!
புதுச்சேரியில் இழுபறி நீடித்துவந்த நிலையில் பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவிகள் தர ரங்கசாமி ஒப்புக் கொண்டுள்ளார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னர் தமிழிசையை சந்தித்து ஆட்சியமைக்க ரங்கசாமி உரிமை கோரினார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 7ம் தேதி முதல்வராக ரங்கசாமி மட்டும் பதவியேற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து அமைச்சரவையை இறுதி செய்து 2ம் தேதி ஒட்டுமொத்தமாக பதவியேற்கலாம் என்ற பாஜக கூறியதை ரங்கசாமி ஏற்கவில்லை. மேலும் பாஜக துணை முதல்வர் பதவி கூடுதலாக ஒரு அமைச்சர் பதவியை வழங்குமாறு பாஜக ரங்கசாமியிடம் கோரியது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் துணை முதல்வர் பதவியும், கூடுதலாக ஒரு அமைச்சர் பதவியை வழங்க இடமில்லையென தெரிவித்தார். ஆனால் பாஜக, முதல்வராக பொறுப்பேற்றவுடன் இதனை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினால் அனுமதி பெற்றுத்தருவதாக தெரிவித்தது. நீங்கள் கொடுப்பதாக இருந்தால் எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை என ரங்கசாமி ஆமோதித்ததாக பாஜகவினர் தெரிவித்தனர். இதையடுத்து 9ம் தேதி புதிய அமைச்சரவை பதவியேற்கும் என கூறப்பட்டது. இதற்கிடையே ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சென்னையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள சென்று விட்டார். இதனால் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பது தாமதமானது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து ரங்கசாமி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதற்கிடையே தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டார். தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் எளிமையாக நடைபெற்றது.
அதேபோல் துணை முதல்வர், கூடுதலாக ஒரு அமைச்சர் என்ற திட்டத்திற்கும் ரங்கசாமி இதுவரை பரிந்துரைக்கவில்லை. இதனால் பாஜகவுக்கும் ரங்கசாமிக்கும் இடையே பனிப்போர் நடந்து வருவதாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக 3 நியமன எம்எல்ஏக்களை பாஜக அதிரடியாக நியமனம் செய்தது. இதனால் தனது பலத்தை 9 ஆக அதிகரித்து கொண்டதோடு, 3 .சுயேச்சைகள் ஆதரவுடன் சட்டசபையில் பாஜக பலம் பெற்றது. இது போன்ற பிரச்னைகளால் வாக்கு எண்ணிக்கை முடிந்து 32 நாட்களை கடந்து விட்ட போதிலும் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாடு நடைமுறைக்கு வரவில்லை. குறிப்பாக பேரிடர் நேரத்தில் களப்பணியாற்றவும், அரசுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் அமைச்சரவை பொறுப்பேற்காதது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது, ஓட்டுப் போட்டு அரசை தேர்வு செய்துவிட்ட பிறகும் இலாகா, பதவி, துணை முதல்வர் என தனிப்பட்ட காரணங்களுக்காக அரசை செயல்பாட்டுக்கு கொண்டுவராமல் காலம் தாழ்த்துவது என். ஆர் காங்கிரஸ் பாஜக மேல் மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒப்பிட்டு கொரோனா கடந்த அலையில் நாராயணசாமியின் பணிகளை மக்கள் நினைவு கூர்கின்றனர். முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றும் இன்று வரை குடியரசு தலைவர் ஆட்சி தான் தொடர்வதாக மக்கள் கருதுகின்றனர், குறிப்பாக மிக முக்கியமான இந்த நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சரின் பங்களிப்பு மிக அவசியமானது. ஆனால் அந்த துறையின் அமைச்சர் யார் என்று முடிவு செய்யாதது மிகவும் வேதனையாக இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் 24 நாட்களுக்கு பிறகு பாஜக தரப்பில் இருந்து சபாநாயகர், துணை முதலமைச்சர் மற்றும் இரண்டு முக்கிய அமைச்சர்கள் பதவி வேண்டும் என நிபந்தனை வைக்கப்பட்டதாகவும், இதற்கு முதல்வர் ரங்கசாமி மறுப்பு தெரிவித்ததால் இழுபறி நீடித்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் 24 நாட்களாக ஏற்பட்டு வந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவிகள் தர ரங்கசாமி ஒப்புக்கொண்டதாகவும் துணை முதலமைச்சர் பதவியை மட்டும் தர மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து இழுபறி முடிவுக்கு வந்துள்ளதாகவும், பாஜகவும் இதனை ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் புதுவையில் நிலவி வந்த அரசியல் இழுபறி முடிவுக்கு வந்ததை அடுத்து விரைவில் எம்எல்ஏக்கள் அமைச்சரவை பதவி ஏற்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது.