One year of DMK Governance : ஆட்சியில் ஓராண்டு.. திமுக அரசுக்கு எதிராக எழுந்த விமர்சனங்கள் என்னென்ன?
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து நாளையுடன் (மே.7) ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு காலத்தில் 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் செய்யக்கூடியவற்றை செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து நாளையுடன் (மே.7) ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு காலத்தில் 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் செய்யக்கூடியவற்றை செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் பிரச்சனைகள் இருப்பதாக எதிர்கட்சிகளும், விமர்சகர்களும் பல காரணங்களை முன்வைக்கின்றனர். முக்கிய விமர்சனங்களாக வைக்கப்படுபவை 1. ராஜகண்ணப்பன் சர்ச்சை 2. மின்வெட்டுப் பிரச்சனை 3. லாக் அப் மரணங்கள்.
முதுகுளத்தூர் BDO ராஜேந்திரன். இவரை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சாதி பெயரை சொல்லித் திட்டி அவமானப்படுத்தியதாகப் புகார் எழுந்தது. அரசியலில் ராஜகண்ணப்பனின் தாய்வீடு என்னவோ அதிமுக தான். 1991-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோது, திருப்பத்துார் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்த கண்ணப்பனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது. பொதுப்பணி, மின்சாரம், நெடுஞ்சாலை ஆகிய மூன்று முக்கியத் துறைகளைக் கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்கள் வட்டத்தில் ராஜகண்ணப்பனும் இணைந்தார். ஆனால் அதே ராஜகண்ணப்பன் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டி அதிமுக தொடங்கும் அளவுக்குச் சென்றார். அதன் பின்னர் தனிக்கட்சி, திமுக, அதிமுக என மாறி மாறி பயணித்துவிட்டு மீண்டும் திமுகவில் ஐக்கியமாகி சீட் வாங்கி அமைச்சராகவும் ஆனார். ஆனால், அமைச்சரானதிலிருந்தே அவர் கட்சிக்குள் கெத்துகாட்டி வந்ததால் தலைமை சற்று அதிருப்தியில் இருந்ததாகவே தெரிகிறது. இந்நிலையில் தான் ராஜ கண்ணப்பன் மீது பிடிஓ ராஜேந்திரன் புகார் கூற அவரை இலாகா மாற்றம் செய்து உத்தரவிட்டார் முதல்வர். ஆனால் முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு பெரும் விமர்சனங்கள் எழுந்தன. சமூக நீதி, சமத்துவம் பேசும் கட்சி முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைச்சரே பட்டியிலன மக்களை இழிவுபடுத்தியும் கூட அவரை பதவி நீக்கம் செய்யாமல் இலாகா மட்டுமே மாற்றியது நியாயமா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இன்னமும் எழுப்பப்படுகின்றன.
தமிழகமெங்கும் மின்வெட்டு. இரவு, பகல், பரீட்சை நாள் என்று எந்த பாரபட்சமும் இன்றி மின்வெட்டு. திமுக வந்தால் மின்வெட்டு வரும் என்று அன்று அதிமுக பிரச்சார மேடைகளில் சொன்னது உண்மையாகிவிட்டதோ என்று கூறும் அளவுக்கு அன்றாடம் மின்வெட்டுகள் உள்ளன. கோடை வெயில் ஒருபுறம் மின்வெட்டு மறுபுறம் என தமிழக மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் மின்வெட்டு தமிழக பிரச்சனை மட்டுமல்ல தேசிய பிரச்சனை. நிலக்கரி பற்றாக்குறை தான் காரணம் என்று அரசு கூறுகிறது. ''மத்தியத் தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் சுமார் 750 மெகாவாட் மின்சாரம் திடீரென தடைபட்டது. இதன் காரணமாகவே சில இடங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.
தமிழ்நாட்டின் தினசரி மின்சாரத் தேவை 17 ஆயிரம் மெகாவாட் ஆகும். இதில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 6,500 முதல் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு திடீரென்று 4,909 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது. இந்த பற்றாக்குறையே அறிவிக்கப்படாத மின் தடைக்கு முக்கியக் காரணம் என்ற அரசு விளக்கத்தை ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. தமிழகத்தில் ஒரு நாளைக்கான மின் உற்பத்தித் திறன் 13,000 மெகா வாட் என்ற அளவில் மட்டுமே உள்ள நிலையில், ஒரு நாளைக்கான மொத்த மின்தேவையோ 17,000 மெகா வாட் என்ற அளவில் இருக்கிறது. எனவே வெறும் 800 மெகா வாட் மின்சாரப் பற்றாக்குறையே மொத்த மின்வெட்டிற்கும் காரணம் என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று கூறும் எதிர்க்கட்சிகள் அரசின் மெத்தனமே மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்வெட்டு மாநிலமாக மாற்றியுள்ளது எனக் கூறுகின்றனர்.
சாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் லாக் அப் மரணம் அதிமுக ஆட்சிக்கு மிகப்பெரிய களங்கமாக அமைந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, இதனை பெரிய விவகாரமாக கையில் எடுத்தது. தேர்தல் பிரச்சாரங்களிலும் இது எதிரொலித்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் லாக் அப் மரணங்கள் நடக்கின்றன. அண்மையில் சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சந்திப்பில் வாகன சோதனையின்போது கஞ்சா மற்றும் கத்தியுடன் பிடிபட்ட விக்னேஷ் என்ற இளைஞரை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது, உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தங்கமணி என்பவரும் வீட்டில் விஷச்சாராயம் வைத்திருந்ததாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் சிறையில் இருந்த போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல் கடந்த ஜனவரி மாதம் சேலம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மாற்றுத்திறனாளி பிரபாகரன் காவல் நிலைய விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்தார். இந்த அடுத்தடுத்த மரணங்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் வாக்குறுதி, சொத்துவரி எனப் பல பிரச்சனைகள் இருந்தாலும் கூட ராஜகண்ணப்பன் சர்ச்சை, மின்வெட்டுப் பிரச்சனை, லாக் அப் மரணங்கள் ஆகியன தான் திமுகவின் சறுக்கல்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.